சி.வி.விக்னேஸ்வரன்

சி.வி.விக்னேஸ்வரன்

“13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.” – சி.வி.விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது. புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும். இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும். புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம். நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம். இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

“எமது மக்கள் பொருளபாதார ரீதியாக பழமிழந்து போயுள்ளார்கள்.” – சி.வி.விக்னேஸ்வரன்

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் பதிவின் பின்னர் இன்று முதலாவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மக்கள் பொருளாதார ரீதியாகப் பலம் இழந்து காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் நாங்கள் எந்த அளவுக்கு கட்சி என்ற ரீதியில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக பேசியுள்ளோம்.அந்த வகையில் வீட்டுத்தோட்டம் காளான் வளர்ப்பு பற்றி ஆராய்ந்தோம். எங்களால் முடிந்த புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடியும் என்று பேசியுள்ளோம்.

தவழ்ந்துவிட்டு தற்பொழுது எழுந்து நிற்கும் கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.அடிமட்டத்தில் மக்களின் ஆதரவை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அடிமட்டத்தில் மக்களிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அதேவேளை தலைவர்கள் மூத்தவர்களின் அனுபவங்களும் அறிவும் அரசியல் ஞானமும் இளைஞர்களின் வீரியமும் சேர்ந்து எமது கட்சியைக் கொண்டு நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கொரோனா, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் எமது கட்சியின் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே நடந்திருந்தது. வேகமாக கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

இதுவரை காலமும் நாங்கள் கூட்டணி என்ற வகையிலே ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம்.என்னுடைய கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் தம்மை பலப்படுத்த வேண்டும். பின்னர் தேர்தல் காலத்தில் எல்லோரும் சேர்ந்து பொதுச் சின்னத்தில் முன்னிறுத்தி முகம் கொடுக்கவேண்டும்.

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளது என்றார்.

தமிழ் கட்சிகள் பொதுவாக கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, வஞ்சகம் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் முன்வந்தால் இணைந்து செயற்படலாம். உள்ளே ஒரு காரணத்தை வைத்து கொண்டு சேர்ந்து செல்வோம் என்று கூறிக்கொண்டு இறுதி நேரத்தில் வெளியில் தள்ளுவதை ஏற்கமுடியாது. எல்லோரும் சேர்ந்து செயற்பட முடியும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன என்றார்.

சிங்கள மயமாகவுள்ள வடக்கு – எச்சரிக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன் !

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்த போது ,

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும். இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்களும் நம்மோடு இணைந்துள்ளனர்.

இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற 13வது திருத்தச் சட்டம் ஒன்றே. அதை நீக்கினால் மத்திய அரசாங்கம் துணிந்து வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துவிடும்.

ஒற்றையாட்சியின் கீழ் எமது அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது என குறிப்பிட்ட விக்னேஸ்வரன், சில முக்கிய நடைமுறைப் பிரச்சனைகளை பதின்மூன்றாம் திருத்தச்சட்ட அமுலாக்கத்தின் ஊடாக நாம் கையாளலாம் என கூறினார்.

“சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கு கனவிலும் இடமில்லை.” – விக்கினேஸ்வரனுக்கு சரத் வீரசேகர பதில் !

“புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு பேரழிவைச் சந்தித்தது என்றும், புதிய அரசமைப்பில் சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்சு இந்த ஆட்சியில் இடமில்லை. இந்த முறைமைகள் புதிய அரசமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது. நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம்தான்  தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

புதிய அரசமைப்பில் இது தொடர்பில் தெளிவாகப் குறிப்பிடப்படும்.

ஒற்றையாட்சி முறைமையால் இந்த நாடு பேரழிவுகளைச் சந்திக்கவில்லை. பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவைத் தவிடிபொடியாக்கினோம். அவர்களை இல்லாதொழித்தோம்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமைதான் பிரிவினைக்கு வழிவகுக்கும். அது நாட்டைப் பிளவுபடுத்தும்; நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பாதகமாக அமையும்.” என்றார்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்
திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு,
நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது
எனது கருத்து.

தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.

எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதி
லாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.

எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு
ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக
இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள்
பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“சிங்கள அரசாங்கம் தங்கள் காரியம் முடியும் வரையில் காலைப் பிடிப்பார்கள் அதன் பின் கழுத்தைப் பிடிப்பார்கள்” – சி. வி விக்னேஸ்வரன்

“சிங்கள அரசாங்கம் தங்கள் காரியம் முடியும் வரையில் காலைப் பிடிப்பார்கள் அதன் பின் கழுத்தைப் பிடிப்பார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் எனது உரைகளில் தொடர்ச்சியாக கூறி வந்ததே இன்றைக்கு இந்தியாவுக்கு நடந்துள்ளது. அன்று தொட்டு இன்று வரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் நடந்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது சற்று முன்னதாகவே நடந்துவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயம்.

இனியாவது இலங்கைத் தீவில் நிரந்தர நம்பிக்கைக்குரிய தரப்பாக இந்தியா தமிழ் மக்களைக் கருதி அவர்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் அவர்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை மையப்படுத்தி தனது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவுசெய்யும் வகையில் சர்வதேச சமூகத்தினால் வடக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தலைமை ஏற்று நடத்த முன்வர வேண்டும்.

கிழக்கு முனை விடயத்தில் நடந்ததே நாளை 13ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும். ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்வுக்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது இந்திய மாநிலங்களுக்கு வழங்கும் அதே உரிமைகளை இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் ஜே.ஆர் அவற்றை எல்லாம் மாற்றி ஒரு உருப்படாத 13வது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் பின் வந்த ஆர்.பிரேமதாச அதற்கு ஒரு படி மேலே போய் அரசாங்க அதிபர், மாவட்ட செயலர், கிராம சேவகர் ஆகியோரை மாகாண அதிகாரத்தின் கீழிருந்து பிரித்தெடுத்து மத்திய அரசின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வந்தார். வலுவற்ற 13வது திருத்தச் சட்டத்தில் கொடுத்த சொற்ப காணி, காவல்துறை அதிகாரங்களைக் கூட இது வரையில் எந்த சிங்கள அரசாங்கமும் தரவில்லை. சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள். இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் காரியம் முடியும் வரையில் காலைப் பிடிப்பார்கள் அதன் பின் கழுத்தைப் பிடிப்பார்கள். இந்தியாவும் இலங்கைத் தமிழ் மக்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இல்லா விட்டால் இருவருக்குமே அதோ கதி தான்! என தெரிவித்துள்ளார்.

“நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” – சி.வி. விக்னேஸ்வரன்

“இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அண்மையில் ஊடக சந்திப்பொன்றின் போது அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டிருந்த கருத்து தொடர்பாக பேசிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி தொடர்பாக தன்னுடைய அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். எனினும் அது சமூக ஊடகங்களில் வேறு விதமாக பொருள் கொ்ளப்பட்டது எனக்குறிப்பிட்டு பேசுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில் …

இராணுவப் பயிற்சி பற்றிக் கூறிய விடயங்கள் பத்திரிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றே கூறினேன்.
என்னைப் போன்றவர்கள் எவ்வாறு எங்கள் கல்லூரிகளில் கல்லூரியை விட்டு விலக முன்னர் போர்ப் பயிற்சி நெறிகளில் பாண்டித்தியம் பெற்றோமோ ? அதே போன்று கல்லூரிகளில் இருக்கும் போதே எமது மாணவ மாணவியர் பயிற்சி பெற வேண்டும் என்றே கூறினேன்.

அவர்களுக்குப் பயிற்சி யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி அப்போது எழுந்தது. முழுமையாகத் தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இராணுவத்தில் இருந்தால் அவர்கள் தமிழில் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் முன்னாள் போராளிகள் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் தமிழ் நாட்டில் இருந்து வருவித்து அவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளேன். சிங்களவர்களோ சிங்கள மொழியிலோ பயிற்சிகள் அளிக்கக் கூடாது என்றும் கூறினேன்.

அமைச்சர் கூறியது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றி. அவர்கள் அநேகமாகக் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக கல்லூரியில் பயிலும் 16 வயதுடையோருக்கு கல்லூரியிலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். இதனைப் புரியாமல் நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம். கல்லூரியில் போர்ப் பயிற்சி பெற்றமையின் நன்மைகளைப் புரிந்தே நான் அவ்வாறு கூறினேன். இன்றைய இளைஞர் யுவதிகளை ஒழுக்க சீலர்களாக மாற்றக் கூடியது இப் பயிற்சி” என குறிப்பிட்டுள்ளார் .

“18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன்” – சி. வி விக்னேஸ்வரன்

18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  அட்மிரல் சரத் வீரசேகர  இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வினவப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைஸ் அட்மிரல் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வட கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும். ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம். எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ? சிங்கள மொழியிலோ? எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது.

பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம். எங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்று சேர்த்தது. எம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், என பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயற்பாடு, நாட்டின் பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன.

காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக் கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன. 1958ம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன். காரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது.

எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாகத் தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் .

இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.

சிங்கள அரசியல்வாதிகளும் படையினரும் இணைந்து எவ்வாறு வடகிழக்கைத் தம்முடைய முற்றும் முழுதுமான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்படி மாற்ற வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு அம்சமே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துரை.

சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” – சி.வி.விக்னேஸ்வரன் காட்டம் !

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கும் போது,

இப்போது இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனை அமைத்தார்கள். இதனை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனை அகற்றியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற பல திட்டங்கள் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமது அன்புக்குரிய உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியை ஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது. இது இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்து துப்பாக்கி முனையில் மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பது இராணுவ அடக்குமுறையின் அசிங்க முகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து திரும்ப வேண்டும். இப்பொழுது இங்கு நடப்பது வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமது சிங்கள சகோதர சகோதரிகள் உணர்வார்களாக!

அதேவேளை, இந்த நினைவுத் தூபி இடிப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று காரணம் கூற முடியாது. ஒரு தவறான காரியத்தை செய்யுமாறு மேலிடத்து உத்தரவு வருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரிய வைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்த விடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும், இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌ வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்” – ‌சி.வி.விக்னேஸ்வரன்

“தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌
வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்” என நாடாளுமன்ற‌ ‌உறுப்பினர் நீதியரசர்‌ ‌சி.வி.விக்னேஸ்வரன்‌ ‌தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில்‌ ‌ ‌நாட்டின்‌ ‌தற்போதைய‌ ‌நிலை‌ ‌சம்பந்தமான‌ ‌விவாதத்தின் போது கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் பாராளுமன்றத்தில்‌ ‌ ‌மேலும் போசிய போது ,

‌மாண்புமிகு‌ ‌சபாநாயகர்‌ ‌அவர்களே!‌ ‌

இந்த‌ ‌அரசாங்கம்‌ ‌எல்லா‌ ‌இலங்கை‌ ‌மக்களுக்குமான‌ ‌அரசாங்கம்‌ ‌அல்ல‌ ‌என்பதை‌ ‌சொல்லிலும்‌ ‌
செயலிலும்‌ ‌நிரூபித்து‌ ‌வருகின்றது.‌ ‌தங்களுக்கு‌ ‌வாக்களித்த‌ ‌பௌத்த‌ ‌சிங்கள‌ ‌மக்களின்‌ ‌விருப்பங்களுக்கு ‌ ‌அமைவாகவே‌ ‌செயற்படமுடியும்‌ ‌என்று‌ ‌ஜனாதிபதி‌ ‌மற்றும்‌ ‌அரசாங்க‌ ‌
உறுப்பினர்கள்‌ ‌வெளிப்படையாகவே‌ ‌கூறிவருகின்றனர்.‌ ‌ ‌

யாழ்ப்பாணம்‌ ‌மிருசுவில்‌ ‌பிரதேசத்தில்‌ ‌மூன்று‌ ‌சிறுவர்கள்‌ ‌உட்பட‌ ‌எட்டு‌ ‌தமிழர்களை‌ ‌படுகொலை‌ ‌
செய்தமைக்காக‌ ‌மரண‌ ‌தண்டனை‌ ‌விதிக்கப்பட்ட‌ ‌முன்னாள்‌ ‌இராணுவ‌ ‌அதிகாரி‌ ‌சுனில்‌ ‌ரத்னாயக்கவுக்கு‌ ‌
ஜனாதிபதி‌ ‌கோட்டாபய‌ ‌ராஜபக்ஸ‌ ‌மன்னிப்பு‌ ‌அளித்து‌ ‌கடந்த‌ ‌வருடம்‌ ‌மார்ச்‌ ‌26ந்‌ ‌திகதி‌ ‌அன்று‌ ‌விடுதலை‌ ‌செய்துள்ளார்.‌ ‌அதுவும்‌ ‌எந்தவித‌ ‌யுத்தமும்‌ ‌இடம்‌ ‌பெறாத‌ ‌இடத்தில்‌ ‌அவர்‌ ‌இந்தப்‌ ‌படுகொலையைச்‌ ‌செய்திருந்தார்.‌ ‌

குறிப்பாக‌ ‌சட்டம்,‌ ‌ஒழுங்கு,‌ ‌பாதுகாப்பு‌ ‌துறைகளில்‌ ‌வேலை‌ ‌செய்பவர்கள்‌ ‌தவறிழைத்தால்‌ ‌அவர்களுக்கான‌ ‌தண்டனையைக்‌ ‌கடுமையாக‌ ‌நடைமுறைப்‌ ‌படுத்துவதே‌ ‌வழமையான‌ ‌நடைமுறையாகும்.‌ ‌ஆனால்‌ ‌இங்கு‌ ‌தமிழர்களைப்‌ ‌படுகொலை‌ ‌செய்பவர்களுக்கே‌ ‌பதவி‌ ‌உயர்வுகளும்,‌ ‌பதக்கங்களும்,‌ ‌மன்னிப்புக்களும்‌ ‌
வழங்கி‌ ‌ஊக்கிவிக்கப்படுகின்றனர்.‌ ‌இத்தகைய‌ ‌காரணங்களினால்‌ ‌தான்‌ ‌கடந்த‌ ‌காலங்களில்‌ ‌எமது‌ ‌இளைஞர்கள்‌ ‌ஆயுதம்‌ ‌ஏந்த‌ ‌ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.‌ ‌ஒரே‌ ‌நாடு,‌ ‌ஒரே‌ ‌சட்டம்‌ ‌என‌ ‌அரசாங்கத்தின்‌ ‌எல்லா‌ ‌உறுப்பினர்களும்‌ ‌கூறிவருகின்றனர்.‌ ‌ஆனால்,‌ ‌நடைமுறையில்‌ ‌எமக்கென‌ ‌வேறு‌ ‌சட்டம்‌ ‌நீதிக்கு‌ ‌ முரணான‌ ‌வகையில்‌ ‌பின்பற்றப்படுகின்றது.‌ ‌இதுதான்‌ ‌யதார்த்தம்.‌ ‌உங்களைப்‌ ‌பொறுத்தவரையில்‌ ‌ நாம்‌ ‌வேறு‌ ‌நாட்டைச்‌ ‌சேர்ந்தவர்கள்.‌ ‌ஆகவே,‌ ‌எமக்கான‌ ‌நீதியை‌ ‌நாம்‌ ‌தான்‌ ‌சர்வதேச‌ ‌சட்டங்களுக்கு‌ ‌அமைவாக‌ ‌பெற்றுக்‌ ‌கொள்ளவேண்டும்.‌ ‌ ‌

எமது‌ ‌இளைஞர்களின்‌ ‌ஆயுதப்‌ ‌போராட்டம்‌ ‌நியாயமானது‌ ‌என்பதை‌ ‌இன்று‌ ‌சர்வதேச‌ ‌ரீதியாக‌ ‌அரசாங்கத்தின்‌ ‌செயற்பாடுகளே‌ ‌நிரூபிக்கும்‌ ‌வகையில்‌ ‌அமைந்துள்ளன.‌ ‌ நாம்‌ ‌இலங்கையர்களாக‌ ‌முன்னோக்கி‌ ‌செல்லப்‌ ‌போகின்றோமா‌?‌அல்லது‌ ‌தொடர்ந்தும்‌ ‌குறுகிய‌ ‌ அரசியல்‌ ‌இலாபங்களுக்காக‌ ‌இனங்களாகப்‌ ‌பிரிந்து‌ ‌பின்னோக்கிச்‌ ‌செல்லப்‌ ‌போகின்றோமா?‌ ‌என்பதை‌ ‌ஆட்சியாளர்களே‌ ‌தீர்மானிக்க‌ ‌வேண்டும்.‌ ‌

இந்தச்‌ ‌சந்தர்ப்பத்தில்‌ ‌தமிழ்‌ ‌மக்களும்‌ ‌இந்த‌ ‌நாட்டில்‌ ‌உரிய‌ ‌அதிகாரப்‌ ‌பகிர்வைப்‌ ‌பெற்று‌ ‌சமத்துவத்துடன்‌ ‌வாழ‌ ‌வேண்டும்‌ ‌என்று‌ ‌துணிச்சலுடன்‌ ‌குரல்‌ ‌கொடுக்கும்‌ ‌சிங்கள‌ ‌சகோதர‌ ‌சகோதரிமார்,‌ ‌சிங்கள‌ ‌புத்திஜீவிகள்,‌ ‌பௌத்த‌ ‌மதகுருமார்‌ ‌மற்றும்‌ ‌ஊடகவியலாளர்களுக்கு‌ ‌எனது‌ ‌நன்றிகளை‌ ‌நான்‌ ‌இங்கு‌ ‌கூறி‌ ‌வைக்கின்றேன்.‌ ‌ ‌

தமிழ்‌ ‌அரசியல்‌ ‌கைதிகள்‌ ‌மன்னிப்பு‌ ‌அளிக்கப்பட்டு‌ ‌விடுதலை‌ ‌செய்யப்பட‌ ‌வேண்டும்‌ ‌என்பதற்கு‌ ‌
பல‌ ‌காரணங்கள்‌ ‌உண்டு‌ ‌-‌ ‌ ‌

1.ஏற்கனவே‌ ‌நாட்டின்‌ ‌அரசாங்கத்தை‌ ‌மாற்றப்‌ ‌போர்‌ ‌புரிந்த‌ ‌ஜே.வீ.பீ‌ ‌யினர்‌ ‌ அனைவருக்கும்‌ ‌மன்னிப்பு‌ வழங்கியாகிவிட்டது.‌  ‌எமது‌ ‌இளைஞர்கள்‌ ‌தமது‌ ‌உரிமைகளுக்காகவே‌ ‌ போரிட்டவர்கள்.‌ ‌அரசாங்கத்தை‌ ‌மாற்ற‌ ‌அல்ல.‌ ‌ஆகவே‌ ‌அவர்களை‌ ‌விடுவிக்க‌ ‌வேண்டும்.‌ ‌

2.போரில்‌ ‌தலைமைத்துவம்‌ ‌வகித்த,‌ ‌ஆணைகள்‌ ‌இட்ட‌ ‌தமிழ்‌ ‌இயக்க‌ ‌முக்கியஸ்தர்கள்‌ ‌பலர்‌ ‌அரசாங்கத்தால்‌ ‌மிக்க‌ ‌நெருக்கத்துடன்‌ ‌அணைத்துக்‌ ‌கொள்ளப்பட்டுள்ளனர்.‌ ‌ஆனால்‌ ‌சாதாரண‌ ‌இயக்க‌ ‌அங்கத்தவர்கள்‌ ‌மிகக்‌ ‌கொடூரமாக‌ ‌நடத்தப்பட்டு‌ ‌பல‌ ‌காலமாக‌ ‌சிறையில்‌ ‌
அடைக்கப்பட்டுள்ளனர்.‌ ‌ஏன்‌ ‌என்ற‌ ‌கேள்விக்குப்‌ ‌பதில்‌ ‌இல்லை.‌ ‌

3.கொரோனா‌ ‌தொற்றினால்‌ ‌அவஸ்தைப்படும்‌ ‌தமிழ்‌ ‌சிறைக்‌ ‌கைதிகளைத்‌ ‌தொடர்ந்து‌ ‌தென்னாட்டுச்‌ ‌சிறைகளில்‌ ‌வைத்திருப்பது‌ ‌அவர்களுக்கு‌ ‌பல‌ ‌பிரச்சனைகளைத்‌ ‌தந்து‌ ‌வருகின்றது.‌ ‌அவர்களை‌ ‌விசேடமாக‌ ‌வட‌ ‌கிழக்கு‌ ‌மாகாணங்களில்‌ ‌வைத்துத்‌ ‌தனிமைப்படுத்தினால்‌ ‌தாங்கள்‌ ‌
பாதுகாப்பான‌ ‌இடங்களில்‌ ‌இருப்பதாகவாவது‌ ‌அவர்கள்‌ ‌உணர்வார்கள்.‌ ‌பல‌ ‌தடவைகள்‌ ‌தமிழ்ச்‌ ‌
சிறைக்‌ ‌கைதிகளை‌ ‌எங்கள்‌ ‌தென்னகச்சிறைகளில்‌ ‌கொடூரமாகத்‌ ‌தாக்கப்பட்டு‌ ‌கொல்லப்பட்டமை‌ ‌
உங்கள்‌ ‌எல்லோருக்கும்‌ ‌நினைவிருக்கும்.‌ ‌

4.போர்‌ ‌முடிவிற்கு‌ ‌வர‌ ‌முன்னர்‌ ‌கைது‌ ‌செய்யப்பட்டு‌ ‌சிறைப்பட்டவர்களை‌ ‌போர்‌ ‌முடிந்து‌ ‌பத்து‌ ‌வருடங்களுக்கு‌ ‌மேல்‌ ‌ஆன‌ ‌படியால்‌ ‌அவர்களுக்கு‌ ‌பொது‌ ‌மன்னிப்பு‌ ‌வழங்குவதில்‌ ‌என்ன‌ ‌பிழை‌ ‌இருக்கின்றது?‌ ‌

5.இந்தத்‌ ‌தமிழ்‌ ‌அரசியல்‌ ‌கைதிகள்‌ ‌அனைவரும்‌ ‌பயங்கரவாத‌ ‌தடைச்‌ ‌சட்டத்தின்‌ ‌கீழ்‌ ‌கைது‌ ‌செய்யப்பட்டவர்கள்.‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்சட்டம்‌ ‌பொதுவான‌ ‌எமது‌ ‌சட்டக்‌ ‌கொள்கைகளுக்கு‌ ‌முரணான‌ ‌சட்டம்.‌ ‌குற்ற ஏற்பு‌ ‌வாக்குமூலத்தின்‌ ‌அடிப்படையில்‌ ‌சான்றுகள்,‌ ‌சாட்சிகள்‌ ‌
ஏதுமின்றியே‌ ‌தண்டனை‌ ‌வழங்கப்பட்டவர்கள்‌ ‌அவர்கள்.‌ ‌உச்ச‌ ‌நீதிமன்றத்தில்‌ ‌நான்‌ ‌அளித்த‌ ‌நாகமணி‌ ‌வழக்கின்‌ ‌சாராம்சத்தை‌ ‌விளங்கிக்‌ ‌கொண்டு‌ ‌குற்ற‌ ‌ஏற்பு‌ ‌வாக்கு‌ ‌
மூலத்துக்கு‌ ‌மேலதிகமாக‌ ‌சொல்லப்பட்ட‌ ‌குற்றம்‌ ‌உண்மையில்‌ ‌நடந்தது‌ ‌என்பதை‌ ‌உறுதிப்படுத்த‌ ‌ சாட்சியங்கள்‌ ‌பெறப்பட்டிருந்தால்‌ ‌பல‌ ‌வழக்குகள்‌ ‌தள்ளுபடி‌ ‌செய்யப்பட்டிருப்பன.‌ ‌ குற்றம்‌ ‌உண்மையில்‌ ‌புரியபட்டதா‌ ? ‌என்று‌ ‌அறியாமல்‌ ‌குற்ற‌ ‌ஒப்புதல்‌ ‌வாக்கு‌ ‌மூலத்தை‌ ‌
மட்டும்‌ ‌வைத்து‌ ‌தண்டனை‌ ‌வழங்குவது‌ ‌எவ்வாறு‌ ‌நியாயமாகும்‌ ‌என்பதை‌ ‌எமது‌ ‌ஜனாதிபதியும்‌ ‌
அரசாங்க‌ ‌மேல்‌ ‌மட்டமும்‌ ‌பரிசீலித்துப்‌ ‌பார்க்க‌ ‌வேண்டும்.‌ ‌

6.பௌத்த‌ ‌நாடு‌ ‌என்று‌ ‌தம்பட்டம்‌ ‌அளிக்கும்‌ ‌இந்‌ ‌நாடு‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்‌ ‌சட்டம்‌ ‌போன்ற‌ ‌சட்டக்‌ ‌கொள்கைகளுக்கு‌ ‌எதிரான‌ ‌சட்டத்தின்‌ ‌அடிப்படையில்‌ ‌அரசியல்‌ ‌காரணங்களுக்காக‌ ‌சிறைக்கைதிகளை‌ ‌தொடர்ந்து‌ ‌சிறையில்‌ ‌அடைத்து‌ ‌வைத்திருப்பதை‌ ‌சரியா‌ ‌பிழையா,‌ ‌நீதியா‌ ‌அநீதியா‌ ‌என்று‌ ‌பரிசீலித்துப்‌ ‌பார்க்க‌ ‌வேண்டும்.‌ ‌பயங்கரவாதத்‌ ‌தடைச்‌ ‌சட்டம்‌ ‌அல்லாது‌ ‌ நாட்டின்‌ ‌வழமையான‌ ‌சட்டத்தின்‌ ‌கீழ்‌ ‌தமிழ்ச்‌ ‌சிறைக்‌ ‌கைதிகளுக்கு‌ ‌எதிரான‌ ‌வழக்குகள்‌ ‌ பதியப்பட்டிருந்தால்‌ ‌அத்தனை‌ ‌பேரும்‌ ‌தகுந்த‌ ‌சாட்சியங்கள்‌ ‌இல்லாததால்‌ ‌எப்போதோ‌ ‌
விடுதலை‌ ‌செய்யப்பட்டிருப்பர்.‌ ‌

ஆகவே‌ ‌தமிழ்‌ ‌அரசியற்‌ ‌கைதிகளை‌ ‌உடனே‌ ‌மன்னித்து‌ ‌விடுதலை‌ ‌செய்ய‌ ‌வேண்டும்‌ ‌என்று‌ ‌கேட்டு‌ ‌என்‌ ‌பேச்சை‌ ‌முடித்துக்‌ ‌கொள்கின்றேன்.‌ ‌