சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“சர்வதேச பொறிமுறை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையும்.” – சரத் வீரசேகர

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம். ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம். எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

“புலிகளுக்காக செயற்படும் கூட்டமைப்பினர் சொல்வதை கவனத்திற்கொள்ள தேவையில்லை.” – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(02.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர்.

எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களை சட்டம் தண்டிக்காவிட்டால் பௌத்தர்கள் தண்டிப்பார்கள்.” – சரத் வீரசேகர எச்சரிக்கை !

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும்.” என ஐக்கிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர்,

“பௌத்த மதத்தை அவமதிப்பதும், பின்னர் மன்னிப்புக்கோருவதும் நாட்டில் வழமையான செயற்பாடொன்றாக மாறியுள்ளது. பௌத்தத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் பணங்கள் கிடைக்கின்றன, அதுபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் டிக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்றால் பௌத்தர்கள் இவர்களை தண்டிப்பார்கள். பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். பணத்துக்காக பௌத்தத்தை அவமதிப்பவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.” என சரத் வீரசேகர கடுமையாக சாடியுள்ளார்.

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணிகளை அபகரிப்பது நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” – ரவூப் ஹக்கீம்

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் காணிகளை அபகரிக்க இடமளித்தால், அது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

காணி அபகரிப்புகள் அந்த மக்களை வறுமை நிலைக்கும் வேறு பிரச்சினைகளுக்கும் தள்ளிவிடுகின்ற பிரதான பிரச்சினையாகும்.  யுத்தத்துக்கு பின்னர் காணி அபகரிப்பு பிரச்சினை குறிப்பாக, வடக்கில் பாரியளவில் இடம்பெற்று வருகிறது. அதனால்தான் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் அரசியல்  கட்சிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

காணி அபகரிப்பு வடக்கு, கிழக்கில் இன்னும் இடம்பெற்று வருவதை காண்கிறோம்.

மேலும், திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுக்க முற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். இது பாரிய அச்சுறுத்தலாகும். இதனை சாதாரணமாக கருத முடியாது.

அதேநேரம் இந்த அச்சுறுத்தலை விடுக்கும் சரத் வீரசேகர எம்.பி.தான் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்.  இப்படி அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு தலைவரிடமிருந்து முன்மாதிரி, அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கு எழுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதேநேரம் கிழக்கில் சில பிரதேசங்களை பெளத்தமயமாக்கும் இவ்வாறான சித்த விளையாட்டினால் நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை இன்னும் படுமோசமான முறையில் பாதிக்கப்படப் போகிறது.

மேலும், திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் தொல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விமானப்படையினர் சுவீகரித்துக்கொள்ள முயற்சி இடம்பெறுவதாக அறியக் கிடைத்தேன்.

அந்த பிரதேசத்தின் ஒரு பகுதியில் குடிமக்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதியில் கடல் அமைந்திருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாரிய நிலப்பரப்பை, பாதுகாப்பு தேவைகளுக்காக என தெரிவித்துக்கொண்டு விமானப்படை சுவீகரிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால், உல்லாச பயணிகளின் தேவைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கே இதனை சுவீகரிக்கப்போவதாக தெரியவருகிறது. இதனால் அங்கு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். இவ்வாறான நடவடிக்கை கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்தன; தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதே பிரச்சினை திருகோணமலை அரிசிமலை பிரதேசத்திலும் இடம்பெற்று வந்தது. இந்த காணிகளை பாதுகாத்து தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அத்துடன். இந்த காணிகளை அபகரிக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மதகுருமார்களும் சேர்ந்து வருகின்றனர். துப்பாக்கிகளுடனே வருகின்றனர்.

இப்படியான அநியாயங்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தொடர்ந்தும் இடமளித்தால், இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு என்ன நடக்கும்?

சர்வதேசத்தின் முன்னிலையில், ஜெனீவாவில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு மத்தியில் இவ்வாறு காணிகளை அபகரிக்கும் விடயங்கள் தொடர்ந்தால், மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் பயன் இல்லாமல் போகும் என்றார்.

சிங்கள மக்களுடன் வெடுக்குநாறி ஆலயத்திற்குள் நுழைந்த சரத்வீரசேகர !

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் சிங்கள மக்கள் சிலர் தற்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 27ம் திகதி வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு கட்டளையிடப்பட்டது.

இந்நிலையில் சரத் வீரசேகர தலைமையில் ஒருசிலர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

“இலங்கை , இந்தியாவில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.” – சரத் பொன்சேகா

பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பைக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர “ பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார்.   பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை அவர் அழைத்து வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்த போது,

14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. போராட்டத்தில் தனது குடும்பத்தையே அர்ப்பணித்தவராக பிரபாகரன் திகழ்கின்றார். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.

அவர்களில் ஒருவர்தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார். தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மேலும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

“பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.” – சரத் வீரசேகர

பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

“பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை மக்களுக்கு கொடுப்பது அபாயகரமானது.” – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” – சரத் வீரசேகர காட்டம் !

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த போதே  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்நாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல.

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிக உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு?

மனித உரிமை மீறலை கனடா செய்திருக்கிறது. எனவே மனித உரிமை மீறல் தொடர்பில் பேச கனடாவுக்கு அருகதை இல்லை. சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.

“சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவர ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள். இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும். அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது. அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல. மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம். ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.