சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

“பௌத்தத்தை அவமதித்தால் மட்டுமே கைது செய்கிறீர்கள். ஏனைய மதங்களை அவமதித்த ஞானசார தேரவை கைது செய்ய மாட்டீர்களா..? – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைதுசெய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் பௌத்தைஅவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவவழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வுபேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விடதீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்லமனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்தகொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளது போல நாடு குழப்பத்தில் காணப்படாது எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பௌத்தம் உயர்ந்த மதிப்பை பெறவேண்டியது அவசியம் ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தென்னாசியாவை சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துகிறார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க பெருமை !

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது.” – சந்திரிக்கா குமாரதுங்க

சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது என இலங்கையின்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்சிக்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி கட்சியின் கொள்கைகளையும், கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எந்தக் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“ஷாபி மீதான வெறுப்புணர்வு சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம்.”- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபி மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு வைத்தியர் ஷாபி வழங்கியுள்ள பதிலிற்காக பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபினை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை” – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

“தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரை நிறைவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் பல வாக்குறுதிகளை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை மஹிந்த அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அதன் உறுப்பு நாடுகள் தீர்மானங்களை அடுத்தடுத்து நிறைவேற்றின. எனினும், அந்தத் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசும் அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் முன்மாதிரியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. போதாக்குறைக்கு கடந்த நல்லாட்சி அரசில் மீளவும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இந்த அரசு விலகி நாட்டுக்கான சர்வதேச நெருக்குவாரங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அரசு எரித்து வருகின்றது. இது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை உதாசீனம் செய்யும் அடிப்படை உரிமை மீறலாகும். இந்த விவகாரமும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் எதிரொலிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு சர்வதேச அரங்கில் அவப்பெயரைத்தான் இந்த அரசு சம்பாதிக்கின்றது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் என தெரிவித்துள்ளார்.