கண்ணாடி சந்திரன்

கண்ணாடி சந்திரன்

புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி புளொட்டின் புலியின் இன்னுமொரு பிரதிபலிப்பே – பகுதி 35

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 35 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 15.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 35

தேசம்: இந்த புலம்பெயர் அரசியல் சூழலில் நாங்கள் பல்வேறு அரசியல் இலக்கிய நகர்வுகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்த 92ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பொறியும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இவ்வளவு அரசியலிலும் ஈடுபட்ட நீங்கள், தீப்பொறி அமைப்பிலிருந்து போன ஆட்களோடு அமைப்பிலும் இருந்திருக்கிறீர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களோடு ஒரு அரசியல் இணக்கப்பாட்டையோ தீப்பொறியை மீளக் கட்டமைக்கின்ற அந்த விடயங்களில் செயல்படவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏனென்றால் அவர்களுக்கும் 92 காலப்பகுதியில் இருந்து 2010 அதற்கு பிற்பாடும் தமிழீழ மக்கள் கட்சி, பிறகு மே 18 என்ற ஒரு தொடர்ச்சி இருக்குதானே. அது எதிலயும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளவில்லை. என்ன காரணம்?

அசோக்: ஓம் 86 ஆம் ஆண்டில் பின் தளத்தில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் இருந்து தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. தொடர்வும் இருக்கவில்லை. நாங்களும் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம், தள மகாநாடு, பின் தள மகாநாடு என பிரச்னைகளில் முழ்கி இருந்த நேரம். அவர்களும் சந்திக்கவில்லை. நானும் முயலவில்லை. நான் இங்கு ஐரோப்பாவுக்கு வந்து தான் அவரை சந்திக்கிறேன். தொடர்பு கிடைக்குது எனக்கு. அவர் கனடாவில் இருக்கிறார். நான் பிரான்சுக்கு வந்துட்டேன்.

தேசம்: அது 2016இல் நடக்குது என? அதற்கு முதலே கண்டீர்களா?

அசோக்: இல்லை. இங்க வந்து தான் சந்திக்கிறேன்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் தொலைபேசி உரையாடலில் இருந்தீர்கள்? 90களில்…

அசோக்: வந்து கொஞ்ச காலம் அவர் தலைமறைவாக இருந்தார். அதற்குப் பிற்பாடு அவருக்கும் எனக்குமான உறவு வருது. அப்போ தமிழீழ மக்கள் கட்சி உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி நான் நினைக்கிறேன் ஆனையிறவு தாக்குதல் கட்டத்தில்தான் உருவாகுது. அதற்கு முதல் அவர்கள் தீப்பொறி என்ற பெயரில் தான்…

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம் கனடாவிலிருந்து ரவி என்று சொல்லி அவரின் உண்மையான பெயர் இளங்கோ என நினைக்கிறேன். அவர் பாரிசுக்கு வாரார். வந்த இடத்தில் அவர் என்னை சந்திக்கிறார். தீப்பொறியா தமிழீழ மக்கள் கட்சியா என்று தெரியவில்லை. அந்தக் கட்சியினுடைய பத்திரிகை ஒன்று கொண்டு வந்தவர்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி ஒரு பத்திரிகை யை வெளியிட்டது.

அசோக்: அந்தக் கட்சி பத்திரிகையோடு வந்து என்னை சந்திக்கிறார்.

தேசம்: அதற்கு முதல் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லையா?

அசோக்: அந்த கட்சியோடு எந்த தொடர்பும் இருக்கவில்லை. முதலில் தீப்பொறி என்ற பெயரில் இயங்கிய அமைப்பு பிறகு தமிழீழ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது என நினைக்கிறேன்.

தேசம்: …. சுவிஸ் மாநாடு ஒன்று நடத்தினது தானே.

அசோக்: சுவிஸ் சில் அல்ல. தாய்லாந்தில் இந்த மாநாடு நடக்குது. சபாலிங்கம் தோழர் இங்கே படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த மாநாடு நடக்குது. 94 ஏப்ரல் கடைசி காலங்களில் மே முதல் வாரத்தில நடந்த தென நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த தோழர்கள் சிலர் இந்த மாநாட்டிக்கு சென்றிருந்தனர்.

தேசம்: அப்போ நீங்கள் அவர்களோடு தொடர்பு இல்லை.

அசோக்: அரசியல் சார்ந்து அந்த அமைப்போடு நான் எந்த தொடர்பும் வைத்துக் கெதள்ளவிரும்பவில்லை.

தேசம்: அவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

அசோக்: அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மீது தீப்பொறி மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கு என்று. ஏனென்றால் கண்ணாடி சந்திரன், நேசன் தொடர்பாக கடும் விமர்சனம் இருக்குதானே. அவங்களும் தீப்பொறியில் இருக்கிறபடியால் தெரியும் நான் தீப்பொறிக்குள் வரமாட்டேன் என்று. நேசன், கண்ணாடி சந்திரன், பாண்டி போன்ற யார் யாரெல்லாம் புளொட்டுக்குள்ள மிக மோசமாக அதிகாரதுஸ்பிரயோகம் செய்தார்களோ, பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் தான் தீப்பொறிக்குள் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் புளொட்டில் இருந்து கடைசி வரை உட்கட்சிப் போராட்டம் நடாத்தி வெளியேறிய தோழர்கள் எவரும் தீப்பொறிக்குள் இல்லை.

இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் கடந்தகாலம் பற்றி தெரிந்த யாருமே அதற்குள் போகத் தயாராக இல்லை. ரகுமான் ஜான் தோழர் தொடர்பாக நல்ல அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள். அவர் கோட்பாடு சார்ந்து சிந்திக்கக் கூடியவர். ஆனால் செயற்பாட்டு நடைமுறை தளத்தில் சரியாக அவரால் செயற்பட முடிவதில்லை. வழி நடத்தும் திறன் அவரிடம் இருப்பதில்லை.

அப்போ இளங்கோ வாரார் என்னை சந்திப்பதற்கு வந்து அந்த பத்திரிக்கையைத் தந்து அதனுடைய கொள்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேசம்: இவர் விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவரா?

அசோக்: அதற்குப் பிறகுதான் தெரியும் இவர் விடுதலைப்புலிகளில் இருந்தவர் என்றும் கிட்டுவினனுடைய வொடிகாட்ஸ் சாக இருந்தவர் என்றும். அவரும் தீப்பொறிக்குள் இருக்கிறார். அவர்தான் என்னை சந்திக்க வாரார். இந்த சந்திப்பு கலைச்செல்வனுடைய வீட்ட தான் நடக்குது.

தேசம்: கலைச்செல்வனும், லக்ஷ்மியும் தீப்பொறியில் இருக்கிறார்கள்…?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் அங்க வந்தபடியால் அவர்களுக்கு தொடர்வு இருந்திருக்கலாம். தாய்லாந்து மாநாட்டுக்கு கலைச்செல்வனும், லக்ஷ்மியும் போனது தெரியும். ஏனென்றால் சபாலிங்கம் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் இங்கு இல்லை. மரண இறுதி நிகழ்வுகளுக்தான் வந்தவர்கள்.

இளங்கோ கொள்கைப் பிரகடனம் எல்லாம் கதைக்கிறார். அவர் கதைத்து முடிய நான் கேட்டேன் ஏன் புதிய அமைப்பை தொடங்குகிறீர்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்யலாம் தானே என்று. ஏனென்றால் அதே இராணுவக் கண்ணோட்டம் அதே தமிழீழம். நான் சொன்னேன் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே ஆரோக்கியமாக முடித்துக்கொண்டோம். அதற்குப் பிற்பாடு எந்தவிதமான தொடர்பும் என்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. ரகுமான் ஜான் தோழருடன் தொடர்பு இருந்தது. அவர் இங்க பாரிசுக்கு மூன்று தடவை வந்தார். தீப்பொறி எல்லாம் உடைந்த பிறகுதான் பாரிசுக்கு வந்தவர். அவருக்கு தெரியும் கடும் விமர்சனங்கள் இருக்கிறபடியால் நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டேன் என்று முதலே தெரிந்திருக்கும்.

தேசம்: உங்கள் விமர்சனங்களை தோழர் ரகுமான் ஜானிடம் வைத்துள்ளீர்களா?

அசோக்: ரகுமான் ஜான் தோழர் இங்கு வந்தபோது கடும் விவாதம். நீங்கள் எந்த அடிப்படையில் தோழர்களை விட்டுப்போட்டு போனீர்கள்? நாங்களும் விட்டுட்டு போயிருக்கலாம் தானே? நீங்கள் உண்மையிலேயே உட்கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நாட்டுக்கு வந்திருக்கலாம். ஏன் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையா? நாங்களும் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே தளத்துக்கு போய் தள மாநாடு நடத்துறோம், நீங்கள் எங்களோடு வந்து இருந்தால் எவ்வளவு உறுதியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். கடைசியா தீப்பொறியை உருவாக்கி என்னத்தை நாங்கள் சாதித்தோம்? யாரும் உங்களோடு வரவே இல்லை, அதுவும் அதே புலிக் குணாம்சம். புளொட்டின் இன்னொரு பிரதி பிம்பமாக கூட தீப்பொறி இருக்கவில்லை. அதை விட மிக மோசமாக இருந்தது என்பதுதான் உண்மை என்று கடும் உரையாடல்.

நாட்டில் நடந்த ஆரம்பகால அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தது தீப்பொறியில் இருந்த ஆட்கள் தான். நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் நடந்த படுகொலைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாக இருந்தது நேசனும், கண்ணாடிச் சந்திரனும் தான். மத்தியதர வர்க்க குணாம்சம் இருக்கும்தானே அந்த சொகுசுகளை அனுபவிப்பது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை எப்படி சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லி எனக்கு தான் தெரியும். அதை நான் கண்ணால் பார்த்தேன். இவர்களை நம்பி நாங்கள் எப்படி போக முடியும்?

தேசம்: தோழர் ரீட்டாவின் மீதான பாலியல் பலாக்காரம் தொடர்பாக என்ன அபிப்பிராயம்?

அசோக்: இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நேசன், ஜீவன் நந்தா கந்தசாமி அவங்க இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்படவில்லை. பாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டவர். அவர்களை இன்று வரையிலும் பாதுகாத்துக் கொண்டு நியாயப்படுத்தி கொண்டிருக்கின்ற நபர்கள் என்றால் அப்போது எப்படி இருந்திருப்பார்கள்? குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனம் வேண்டாமா? புளாட்டை போன்றே மோசமான அமைப்பாக தீப்பொறி இருந்தது.

தேசம்: அதைவிட மோசமாக போயிட்டுது…

அசோக்: தோழர் ரீட்டா தொடர்பான பிரச்சனையை ஜென்னியின் திட்டமிட்ட நாடகம் என்றார்கள். பிறகு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போது, சம்பவம் உண்மைதான் ஆனால் இதற்கும் தீப்பொறிக்கும் தொடர்பு இல்லை என்றும், வேறு ஆட்கள் தொடர்பு என்றும் சொன்னார்கள். ஆதாரம் கேட்டபோது பிறகு சொன்னார்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று. இப்போது ஜென்னியின் நாடகம் என்ற பழைய பல்லவியை பாடுகிறார்கள். எந்த நேர்மையும் உண்மையும் இவர்களிடம் இல்லை.

அடுத்தது தனிநபர் பயங்கரவாத செயல்களும் இராணுவ வாத கண்ணோட்டமும்தானே தீப்பொறிக்குள் இருந்தது. கோட்பாடுகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்பே இருக்கவில்லை. இல்லாவிட்டால் கிட்டுக்கு குண்டு விசுவார்களா? யோசித்துப் பாருங்கள். வெறும் இரரணுவ வாதம். என்ன ஆரோக்கியமான முன்னெடுப்பை செய்தீர்கள்? கட்டாயம் எங்களுக்கு சுய விமர்சனம் தேவை. இன்றைக்கு என்னை பொருத்தவரை நான் உட்பட யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லாருமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்கள் தான். யாருமே சுய விமர்சனம் செய்யத் தயாரில்லை. குறைந்தபட்சமாவது நாங்கள் சுய விமர்சனம் செய்யவில்லை தானே. என்னை பொருத்தவரை யாராவது என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அந்தக் குற்றம் உண்மை என்றால் அதை நான் முதலில் ஏற்றுக் கொள்வேன்.

தேசம்: மற்றது புளொட்டில் இருந்த மாசில்பாலன் அவர் அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் பிறகு தீப்பொறியில் இருந்தவர்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தீப்பொறி யிலும் செயற்பட்டார்கள். அதுக்கப்புறம் 2010 வரைக்கும் 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சனை வரைக்கும் அவர்கள் தமிழீழ கட்சியிலிருந்து ஆனையிறவு தாக்குதல் எல்லாம் கொண்டாடுற மனநிலையில்தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் திருப்பி புதிய திசைகள் என்று உருமாற்றம் பெறுகிறார்கள். அதில உங்களோடு நெருங்கி செயற்பட்ட நாவலன் தான் முக்கியமான ஆள். அதுக்குள்ளே ஏன் நீங்கள் போகவில்லை?

அசோக்: நான் மிகக் கவனமாக இருந்தேன். வார்த்தைகள் அல்ல முக்கியம். செயற்பாடே எனக்கு முக்கியம். மார்க்சியம், முற்போக்கு என்று எதையும் எங்களால் கதைக்க முடியும். ஆனால் அதற்கேற்றவாறு உண்மையாக நாம் வாழ்வதில்லை. செயற்படுவது இல்லை. நிறைய வாழ்வில் அனுபவப்பட்டு விட்டேன். எப்படி இவங்கள நம்பி போகமுடியும். மாசில் மாசில்பாலன் அப்பா இடதுசாரி என்று நினைக்கிறேன். நாட்டில் இருந்தவர்.

தேசம்: இருக்கலாம் பிற்காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பில் பங்காற்றி இருந்தவர். நீங்கள் அதை தவறாக எடுக்கக்கூடாது அவர் உண்மையிலேயே புனர்வாழ்வு … சேர்த்தவர் ஏமாத்தியது என்று இல்லை.

அசோக்: அவர் இடதுசாரி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்துதான் வந்தவர். அவரோடு எனக்கு உறவு இருக்கவில்லை. அறிந்திருக்கிறேன். அவருக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் தொடர்பாக எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் எழுதிய எழுதின கட்டுரைகளுக்கு எல்லாம் மிக மோசமான கமெண்ட்ஸ் கொடுத்தார். என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினார். அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனா மாசில்பாலன் அவங்க கொஞ்சம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கொண்ட தோழர் என்று நினைக்கிறேன்.

தேசம்: தீப்பொறியில் இருந்தவர்?

அசோக்: இப்ப அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல் கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்களாக தெரிகிறாங்க.

தேசம்: அவர்கள் ஒரு காலகட்டத்திலும் 2009 வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஆதரவு தளத்திற்கு போயிட்டு திருப்பி புலிகள் இல்லாமல் போனதும்…

அசோக்: நிறைய தோழர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் அவர்களை அவ்வாறான நிலைக்கு கொண்டுபோய் விட்டது என நினைக்கிறன். அவங்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக புலிகளை விளங்கிக் கொண்டு அதன் மீது விமர்சனம் வைத்து புலிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் இங்க வந்த பிறகுதான் கேள்விப்பட்டேன் தீப்பொறியும், அதன் பின்னான தமிழிழ மக்கள் கட்சியும் புலி ஆதரவு நிலையை கொண்டிருந்தது பற்றி. அவங்களுடைய தமிழிழம் என்ற பத்திரிகை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது புலிகளின் ஆதரவுத் தளமாக தான் அந்த பத்திரிகை இருந்தது. ஆணையிறவு தாக்குதலை ஆதரித்து தமிழ்தேசிய முற்போக்கு சக்தியான புலிகளை அடையாளப்படுத்துகின்ற போக்கு தீப்பொறியிடம் இருந்தது.

தேசம்: அந்த இடத்தில் அப்படித்தான் மாசில் பாலன் தோழர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

அசோக்: நான் நினைக்கிறேன் அது அவருடைய அரசியலில் உள்ள தவறான பார்வை. பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முனையும் பலர் அரசியல் புரிதலில் தவறிழைத்து அவர்களும் மறுபுறம் தீவிர இனவாத தமிழ்த்தேசியததை தேர்வு செய்து விடுறாங்க. தீவிர இனவாத தமிழ் தேசியம் என்ன செய்யும் என்று கேட்டால் புலிகளையே ஆதரிக்க செய்யும். ஆரோக்கியமான முற்போக்கு தமிழ் தேசியத்தை தேர்ந்தெடுக்காத வரைக்கும் தமிழ்தேசிய போக்கு இப்படியான பிழையான வழிகளில்தான் கொண்டு போகும்.

தேசம்: தீப்பொறி தமிழீழ மக்கள் கட்சியாக புலிகளோடு இருந்திட்டு இப்ப மே 18 இயக்கம் அதுல நீங்க ஏதாவது தொடர்புபட்டிருக்கிறீர்களா?

அசோக்: தீப்பொறி, தமிழிழ மக்கள் கட்சியின் புலி ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பிற்காலங்களில் தோழர் ரகுமான் ஜானோடு பேசி இருக்கிறன். அவர் புலிகள் தொடர்பாக கடும் விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். தீப்பொறி புலி ஆதரவு நிலை எடுத்த காலகட்டத்தில் அவர்வெளியேறி விட்டார் என நினைக்கிறேன்.

தோழர் ரகுமான் ஜானோடு அரசியல் தளத்தில் எந்தசெயற்பாட்டு உறவும் எனக்கு இருக்கவில்லை. தனிப்பட்ட உறவே இருந்தது. நிறைய அரசியல் உரையாடல் இருந்தது. அவரிடம் இருந்து அரசியல் கோட்பாட்டுத்தளங்களில் நிறைய கற்றுக்கொள் முடியும். இன்றைய தமிழ்ச் சூழலில் அவர் முக்கியமானவர் என்ற எண்ணம் என்னிடம் உண்டு. அவரும் சில தோழர்களும் சேர்ந்து வியூகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. வியூகம் வெளியிட்ட போது இங்க வந்தவர். நாங்க இங்க அதற்கு விமர்சன கருத்தரங்கு ஒன்றை செய்தோம். முள்ளிவாய்க்கால் முடிந்தபிறகு மே 18 தொடங்கிறார். மே 18 தொடங்கி இங்க வாரார். அப்போ நாங்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் மே 18 பற்றிய கொள்கை பிரகடன விளக்கங்கள் சொல்லப்படுது. நான்தான் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். தலைமைதாங்கும் போதே சொல்லிட்டேன் இவர் என்னுடைய தோழர் மே 18 அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று.

தேசம்: அப்போ ஏன் நீங்கள் தலைமை தாங்கினீர்கள்?

அசோக்: தலைமை தாங்குவதற்கு முழுக்கமுழுக்க அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தானே.

தேசம்: அதை அரசியல் கலந்துரையாடலாக தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அசோக்: தலைமை உரையில் நான் சொல்லிட்டேன் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை, மே18 அமைப்பு தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி ரகுமான் ஜான் தோழருடன் கதையுங்கள். இந்த அமைப்பை பற்றி சுதந்திரமான வெளியில் கலந்துரையாட நான் தலைமை தாங்குகிறேன் என்று சொல்லிட்டேன். ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடல் வெளியை உருவாக்க முனையும் தளத்தில் நாம் கலந்து கொள்வதில் தவறில்லை. அதே நேரம் எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை நான் செய்தேன்.

பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.