ஊசி அர்ஜுனா

ஊசி அர்ஜுனா

பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட ஊசி அர்ச்சுனா – பின்னணி என்ன..?

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.

‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன். அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள். அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.

வடக்கில் தனிநாடு தமிழீழம் என முழங்கிவிட்டு – பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு கெஞ்சிய சிறீதரன் எம்.பி.

வடக்கில் தனிநாடு தமிழீழம் என முழங்கிவிட்டு – பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு திரியும் சிறீதரன் எம்.பி.

வைத்தியர் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றம் செல்ல ஆரம்பித்தது முதல் தமிழ் தேசிய அரசியல் பரப்பு மேலும் கிளுகிளுப்பாகியுள்ளது. என்னதான் முன்யோசனை இல்லாமல் பேசுதல், புலம்பெயர் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்தல் என அட்டகாசம் செய்து கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்திற்கு ஊசி அர்ச்சுனா சென்றதன் மூலம் தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் போலித்தேசிய சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது.

முன்னதாக பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண கடிதத்தை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தியிருந்தார் ஊசி அர்ச்சுனா. குறித்த கடிததத்தில் இந்த நாட்டிற்குள் பிரிதொரு நாட்டை உருவாக்க முயற்சிக்க மாட்டோம் என உளப்பூர்வமாக உறுதியளித்து கையெழுத்திடுகிறேன் என்பதாக குறித்த சத்தியப்பிரமாணம் அமைகிறது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கில் தமிழர்கள் முன்னிலையில் தனிநாடு -தனி ஈழம் – தலைவர் வழி என கொக்கரித்து விட்டு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டுக்கு கட்டுப்படுவதாக கையெழுத்திட்டு உறுதியெடுத்துவிட்ட பின்னும்  எங்களை ஏமாற்றுகிறார் என பலரும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் சிறீதரன் எம்.பியின் முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் வைத்தியர் அர்ச்சுனா. மொழிப் புலமை ஏதுமே இல்லாமல் – தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் முகம்கொடுத்துக்கூட பேசத்தயாரில்லாமல் இருப்பதாக சிறீதரன் எம்.பி மீது விசனம் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. கஜேந்திரகுமார் போலவே தனிநாடு – புலிகள்- பிரபாகரன் என பாராளுமன்றத்தில் முழங்கிவிட்டு பாராளுமன்ற அமர்வு முடிய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தொலைபேசி இலக்கத்தை பெறுவதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  மக்கள் நலனுக்காக தொலைபேசி இலக்கம் கேட்கவில்லை. தன் சொந்த தேவைகள் – சலுகைகளுக்காகவே  பிரதமரிடம் தொலைபேசி இலக்கம் பெறுகிறார் சிறீதரன் எம்.பி என அவர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

 

தலைவர் வழி, மாவீரர் தியாகங்கள் என வழமையான ஏமாற்று தேசியவாதிகளுடன் இணைந்தார் ஊசி அர்ச்சுனா!

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

 

எனவே இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

 

கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் அசோக ரங்வல இதனை தெரிவித்தார்.

 

“ஒரு தனிநபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது.அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகவும் தெளிவானது.

 

இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்காக இருக்கலாம், நல்லிணக்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்ய தலையிடுவார்கள் என அனைத்து மக்களும் நம்புகின்றனர்.இது ஒரு தனி நபரால் செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்.

 

அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து முகநூல் கணக்குகளையும் சரிபார்த்தோம்.நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம் என்றார்.

வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளிக்க மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் வெடித்து தள்ளுகிறார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல,  ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது. இருந்தாலும் தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக என்ன கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.