வடக்கில் தனிநாடு தமிழீழம் என முழங்கிவிட்டு – பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு திரியும் சிறீதரன் எம்.பி.
வைத்தியர் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றம் செல்ல ஆரம்பித்தது முதல் தமிழ் தேசிய அரசியல் பரப்பு மேலும் கிளுகிளுப்பாகியுள்ளது. என்னதான் முன்யோசனை இல்லாமல் பேசுதல், புலம்பெயர் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்தல் என அட்டகாசம் செய்து கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்திற்கு ஊசி அர்ச்சுனா சென்றதன் மூலம் தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் போலித்தேசிய சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது.
முன்னதாக பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண கடிதத்தை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தியிருந்தார் ஊசி அர்ச்சுனா. குறித்த கடிததத்தில் இந்த நாட்டிற்குள் பிரிதொரு நாட்டை உருவாக்க முயற்சிக்க மாட்டோம் என உளப்பூர்வமாக உறுதியளித்து கையெழுத்திடுகிறேன் என்பதாக குறித்த சத்தியப்பிரமாணம் அமைகிறது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கில் தமிழர்கள் முன்னிலையில் தனிநாடு -தனி ஈழம் – தலைவர் வழி என கொக்கரித்து விட்டு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டுக்கு கட்டுப்படுவதாக கையெழுத்திட்டு உறுதியெடுத்துவிட்ட பின்னும் எங்களை ஏமாற்றுகிறார் என பலரும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் சிறீதரன் எம்.பியின் முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் வைத்தியர் அர்ச்சுனா. மொழிப் புலமை ஏதுமே இல்லாமல் – தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் முகம்கொடுத்துக்கூட பேசத்தயாரில்லாமல் இருப்பதாக சிறீதரன் எம்.பி மீது விசனம் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. கஜேந்திரகுமார் போலவே தனிநாடு – புலிகள்- பிரபாகரன் என பாராளுமன்றத்தில் முழங்கிவிட்டு பாராளுமன்ற அமர்வு முடிய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தொலைபேசி இலக்கத்தை பெறுவதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார். மக்கள் நலனுக்காக தொலைபேசி இலக்கம் கேட்கவில்லை. தன் சொந்த தேவைகள் – சலுகைகளுக்காகவே பிரதமரிடம் தொலைபேசி இலக்கம் பெறுகிறார் சிறீதரன் எம்.பி என அவர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.