கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்
நேற்றைய தினம் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் பிரதேச சபையின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியே வர்த்தகர்கள் கொட்டும் மழையிலும் போராடினர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வர்த்தகர் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் வர்த்தகர்கள் போராடும் இடத்திற்கு வரவில்லை. ஏற்கனவே பிரதேச சபையால் மூன்று கட்டங்கள் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு கட்டி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது உலக வங்கி அனுசரனையில் நாலாவது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எட்டு கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய நான்காவது கட்டடத்தை கேள்வி கூறல் அதாவது ரென்டர் மூலம் வழங்குவதற்கு பிரதேச சபை பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தினால் கொதிப்படைந்த வர்த்தகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதேமாதிரியானவொரு பிரச்சினையே சாவகச்சேரி சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை கேள்வி கோரல் மூலம் சாவகச்சேரி பிரதேச சபை நடவடிக்கைகளை எடுத்த போது எழுந்தது.
சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் கடைகளை கேள்விக் கோரலுக்கு விடும் போது வெளிமாவட்ட வர்த்தகர்களும் கடைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத்தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் தமது உறவினர்கள் பெயரில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கடைகளை கேள்விக் கோரல் மூலம் எடுப்பதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டு பணத்திற்கு ஈடுகொடுத்து உள்ளூர் வர்த்தகர்கள் கடைகளை கேள்விக் கோரல் மூலம் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டது.
கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்களின் போராட்டம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்றைய பாராளுமன்ற அமர்பில் குறிப்பிட்டிருந்தார்.