உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகளை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விரைவில் கொள்வனவு செய்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை இவ்வாறு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
ஆரம்ப வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனிடையே நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.