ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

“வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் பிச்சையல்ல. அது உரிமை” – பா.உ அர்ச்சுனாவுக்கு ஈ.பி.டி.பி பதில் !

“வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் பிச்சையல்ல. அது உரிமை” – பா.உ அர்ச்சுனாவுக்கு ஈ.பி.டி.பி பதில் !

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டினிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஆக, வரவு செலவுத் திட்டத்தில் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்று பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன.

அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.

கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுர குமார திசாநாயக்க முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு பிச்சை போடப்பட்டுள்ளது எனவும் அந்த பிச்சையை விட அதிக பிச்சையை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் நான் பெற்றுத்தருவேன் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையும் கவனிக்கத்தக்கது.

 

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்! 

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்!

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ரணில் அரசாங்கத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.

திலீபனின் பிரத்தியேக செயலாளாரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட வேட்பாளரான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை டிசம்பர் 19 இல் வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். காணி கொடுக்கல் வாங்கல் ஒன்றில் 15 இலட்சம் பெறுமதியான காசோலையை மோசடி செய்த குற்றச்சாட்டில் டினேஸ் கைது செய்யப்பட்டார். டினேஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திலீபனும் கைது செய்ப்பட்டிருந்தார்.

பிணையில் வெளியே வந்துள்ள திலீபன் ஊடகங்களிடம் தான் குற்றவாளி இல்லை என்கிறார். இந்த காசோலை பரிமாற்றம் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததால் தான் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறுகிறார். மேலும் இந்த கைதின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

திலீபன் நவம்பர் 22 நடந்த பாராளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். தோல்வியின் பின்னர் ஈபிடிபி கட்சியிலிருந்தும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. திலீபன் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது அவருடைய சகாக்களால் பல காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடயத்திலும் பலகீனமான திலீபன் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் என விமர்சிக்கப்படுகிறார்.

திலீபன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன. திலீபனுடைய பிரத்தியேக செயலாளர் மீதும் திலீபனுடைய சகாக்கள் மீதும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திலீபன் மீதான குற்றப் பின்னணி கருதி அவர் மீது ஈபிடிபி கட்சி மேலிடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த போது திலீபன் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

முன்னாள் எம்பி திலீபன் மண் கடத்தல், மரம் வெட்டுதல், காணி அபகரிப்பு மற்றும் மோசடி என பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகின்றார். இவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறார்கள் மக்கள். திலீபன் கள்ள மரம்வெட்டுதல் தொடர்பில் தேசம்நெற் கட்டுரையையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.