இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

ஜனாதிபதி அனுர குமாரவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை!

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

போதைப்பொருள் சுற்றி வளைப்பில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கைது செய்யப்படவில்லை – வேடிக்கையாகவுள்ளது என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் !

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்து பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 

தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மீதான போர், வேடிக்கையான விடயமாக தோற்றமளிப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10,000-இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ், 225.7 கிலோகிராம் மற்றும் 44,267 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகத்தில் புழக்கத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் அளவு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கைகளின் அடிப்படையில் செலவழித்த நேரம் மற்றும் பயன்படுத்திய வளங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் அளவு மிகக் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனூடாக பொலிஸார் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்தே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதைக் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

இவர்கள் நடுத்தர மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுப்பார்களாயின் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் பொலிஸாரால் கூற முடியாது எனவும் இந்த தொடர்பிலான போர் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்ததிலிருந்து இவர்களிடம் தகவல் இருந்திருக்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொது மக்களிடமிருந்து சுமார் 11,000 முறைப்பாடுகள் !

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனூடாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.