நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.