5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்தள்ளது. இவர்களில் குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகின்றனர். இத்தகவல்களை இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக பொலிஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் கைதாகி வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றையதினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் தற்போதுவரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் கைதாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.