இலங்கை கல்வி

இலங்கை கல்வி

புத்தகப்பையின் எடையை குறைக்க கல்வியமைச்சு அறிவுறுத்தல் !

புத்தகப்பையின் எடையை குறைக்க கல்வியமைச்சு அறிவுறுத்தல் !

பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் எடுத்து வரும் பைகளின் எடையை குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வியமைச்சரின் பள்ளி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின் இயக்குனர் கங்கா தில்ஹானியின் கூற்றுப்படி சில பள்ளிகளில் தேவையற்ற புத்தங்களை கொண்டுவரும்படி பிள்ளைகளை வருத்துவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இது தொடர்பான புகார்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பள்ளிப் புத்தகப்பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதன்படி முதலாம் ஆண்டு பள்ளிப் பிள்ளையின் பையின் எடை 2.6 கிலோகிராமும், இரண்டாம் ஆண்டுப் பிள்ளையின் பையின் எடை 3 கிலோகிராமும், ஐந்தாண்டுப் பிள்ளையின் பையின் எடை 4 கிலோகிராமும் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. 10 ஆம் ஆண்டுப் பிள்ளையின் பள்ளிப்பையின் எடை சுமார் 7 கிலோகிராமுமாக இருக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் சுகாதாரப்பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திரத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை ஆசிரயர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இலங்கை பிரித்தானியாவிலிருந்து 1948இல் சுதந்திரம் அடைந்த போதும் இன்றும் காலனித்துவ கல்விமுறையே இலங்கையில் உள்ளது. இலங்கை சுதத்திரம் அடைந்த பின் 1956இல் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்துக்கு முன்னுரிமையற்ற கல்வி முறையால், இலங்கையில் தாய்மொழிகளான சிங்களமும் தமிழும் அபார வளர்ச்சியைக் கண்டன என இலங்கை முன்னாள் ராஜதந்திரி அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம் தெரிவித்தார். தற்போதைய பரீட்சைகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

தென் மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிப்பதற்கு தடைவிதித்து சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தரம் ஒன்பது, ஒன்பதாம் வகுப்புக்கு கீழான மாணவர்களுக்கு தனியார் கல்வியை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழில் மூன்று மாணவர்கள் உள்ள வீட்டில் தனியார் கல்விக்கு 50,000 ரூபாய் செலவிடப்படு வருவதாகவும் இலவசக் கல்வி என்பது பெயரளவில்தான் இருப்பதாகவும் முன்பள்ளிச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் சில குடும்பங்களில் அவர்களுடைய வருமானத்தின் 60 சதவீதம் தனியார் வகுப்புகளுக்குச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட வறணி ஆரம்பப் பள்ளி அதிபர் தனியார் கல்வி என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது என்றார்.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்! 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்!
இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு 31 ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது. ஏலவே இப்பரீட்சையானது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த உள நெருக்கடியை வழங்குவதாக கல்வியாளர்கள் கண்டிக்கின்றனர். ஆளும் என்பிபி அரசாங்கமும் இப்பரீட்சை இலங்கையின் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்களை சிதைக்கிறது என கூறுகிறது. கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் மாணவர்களை உளநெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், தமது அரசு இந்த பரீட்சைகளை நிறுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்விக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி தேசம்நெற் செய்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே. அண்மையில் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்பது மற்றும் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட வகுப்புகளுக்கு தனியார் கல்விநிலையங்கள் வகுப்புகள் எடுக்கக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக கடந்த கால அரசாங்கங்கள் விலகிவிட்டன – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஐந்து வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் பாடசாலை நிதி முகாமைத்துவம் தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின்போது இனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உட்பட தேசிய பாடசாலைக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

 

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

 

கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.

 

ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும்.

இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும்.

 

ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். நாம் முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

 

தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.

 

இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

 

ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் ஒழுங்குபடுத்தல். ஒரே இடத்தில் இல்லாதிருப்பதாகும். கல்வி அமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது.

 

சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாகச் செயற்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

 

எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும்.

நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒரு எண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமது அரசாங்கம் வழங்கும்.

 

அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாக செயற்படுத்துவது கடினம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

 

குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ள நாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும் கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

 

இலவசக் கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிக உயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும் தரமான கல்வியைப் பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது.

 

எனவே பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன் பெற்றோர்களின் சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.இந்த இலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.

 

உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது உங்கள் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றார்.

இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் !

இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் பீஜீங்கில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

சீனாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, பீஜிங் நகரிலுள்ள ஹூவாவி நிறுவனத்தின் ஆய்வு, அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

இந்த சுற்றுப்பயணத்தின் போது ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் Simon Lin-ஐ ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

 

இலங்கையில் மென்பொருள், வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாரென ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இம்முறை வருகை தந்திருப்பதாகவும், டிஜிட்டல் கல்வி முறைமை, பசுமை வலு சக்தி உற்பத்தி தொடர்பில் சீன அரசாங்கம், ஹூவாவி நிறுவனத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.

 

சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாடு சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படுவதுடன், அரச தலைவர்களுக்கு இரவு நேர விருந்துபசாரம் நேற்று வழங்கப்பட்டது.