அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குத் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்குக் காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.

அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கையளிக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தார்.

 

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள் குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

212 குடும்பங்களுக்குக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இந்த வருடம் கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 2550 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும், கண்ணிவெடி அகற்றலுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மீள் குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், மலசலக்கூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் வழங்கப்படும்.

 

இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 50 புதிய நனோ நீர் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அதன்படி, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்நிலை சட்டமூலத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது – எச்சரிக்கிறார் பிரசன்ன ரணதுங்க !

நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரித்துள்ளார்.

இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இணையவழி பாதுகாப்புச் சட்டம் இந்த நாட்டிற்கு அத்தியாவசியமானது. சட்டவிரோதச் செயல்களை செய்து வெறுப்பை விதைப்பவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.

இந்த சட்டம் நாட்டில் இல்லாவிட்டால் சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள்.

இந்த சட்டம் இல்லாவிட்டால் நம்பமுடியாத பொய்யான செய்திகளை நாட்டிற்கு தெரிவிப்பார்கள். ஆபாச விடயங்களை தடையின்றி வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறான செயல்களினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை நாங்கள் தனிப்பட்ட முறையிலும் அனுபவித்திருக்கிறோம்.

பாடசாலை அதிபர்கள் சந்திப்புக்களின் போது இந்த சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அதிபர்கள் எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த இழையவழி பாதுகாப்பு சட்டம் நாட்டின் மீது பொறுப்புள்ள எவரையும் பாதிக்காது. அவர்களால் இன்னும் சிறப்பாகவும் வலுவாகவும் செயற்படமுடியும்.

அரசியல்வாதி தவறு செய்தால் அதை அச்சமின்றி கூறலாம், நீதிமன்றத்திற்கு கூட செல்லலாம்,
அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் ஆபாச வீடியோ பதிவேற்றுபவர்கள் கூடாத விடயங்களை எழுதுபவர்கள், பொய்களை பேசி மக்கள் மீது வெறுப்பை விதைப்பவர்கள் இந்த சட்டத்தில் இருந்து தப்பமுடியாது” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை – ஆளுந்தரப்பு திட்வட்டம் !

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்’ – என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.

அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.’ என்றார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும்.” –

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“30 வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20 ஆயிரத்து 276 ஆக காணப்படுகின்றது. யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3 ஆயிரத்து 828 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளது.

அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மாகாணசபைகளுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை  மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் !

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் இலங்கை!நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (31) நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு கலந்து கொண்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் இந்நாட்டில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான திட்டம் அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்டது.

ஜெனிவா சர்வதேச மனிதநேய கற்றலுக்கான கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் ஆதரவுடன் தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், நாட்டை கண்ணிவெடிகளில் இருந்து விடுவிக்க தேசிய மற்றும் சர்வதேச பங்காளரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற இருப்பதாக அரசாங்கம் எதிர்பார்த்தள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல், கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டில் இயங்கி வருகின்றதுடன், 2010 ஆம் ஆண்டு ´தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையம்´ ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் செயற்படுகின்றது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, வழிநடத்துவதோடு கண்காணிக்கிறது.

இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குவதோடு அது இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகுகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது.

இதுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 204 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து ஆளணிக்கு எதிரான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. ‘தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின்படி’, கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி) டபிள்யூ.எம். ஆனந்த, ஜெனிவா சர்வதேச மனிதநேய கற்றலுக்கான கண்ணிவெடி அகற்றும் மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஓசா மஸ்லிபெர்க், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ. பிரேமச்சந்திரன், இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன, பிரதம அதிகாரி (2) மேஜர் ரஜித அம்பலன்பிட்டிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டாம்.” – பிரசன்ன ரணதுங்க

பாடசாலைகளுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பெற்றோர்கள் வேதனை அடைவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறான உரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (S.J.B) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பேசுகின்றார். அரச பயங்கரவாதத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல சேதங்கள் ஏற்பட்டன. றோயல் கல்லூரி மாணவர்களுக்கும் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறு நடக்கும்போது கல்வி அமைச்சர் எடுக்கும் முடிவு என்ன?

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.LP.P) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நேற்றும் இவர் உரையாற்றினார். பாடசாலைகளுக்கு அருகில் போராட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்பதற்கே பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். பாடசாலைகளுக்கு முன் போராட்டங்களை நடத்தும் போது பெற்றோர்களும் வேதனை அடைகின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் வலியை உணர்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச (S.J.B) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதன் அடிப்படையில் இந்த நாட்டின் நீதித்துறையில் தலையிடுவது போன்ற வேலைத்திட்டங்களை இந்த பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் புகைப்படமாக படம் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை இருக்கிறது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.L.P.P) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இவர் பாராளுமன்றத்திற்கு அதிகாலையில் வந்து பிரசங்கம் செய்கின்றார். ஒரு தடவை மருந்து இல்லை என்றும், இன்னொரு தடலை மற்றொன்றும்சொல்கிறார். எதிர்க்கட்சிகள் தங்கள் விருப்பப்படி பாராளுமன்றத்தை செய்ய விடாதீர்கள்.

பேஸ்புக்கில் என்றோ ஜனாதிபதியாகிவிட்டார் அனுரகுமார – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அநுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி ஆடையை அணிந்து முகநூலில் ஜனாதிபதியாகி விட்டார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

“அவர் ஜனாதிபதியாக கனவு கண்டாலும் மக்களின் இதயங்களில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் தான் அந்த கனவை தொடருமாறு அனுரகுமாரவிடம் கூறுகின்றோம். நாம் களப்பணியாற்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அரச அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகளான எங்களை மக்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“அரச அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகளான எங்களை மக்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.”
என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று (26) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்ட சில நகர திட்டங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளன என்று அங்கு சுட்டிக்காட்டினார்.

அது பொருந்தாது என்றும் எனவே, அந்த திட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு, நகர வளர்ச்சியும் தற்போதையதாக இருக்க வேண்டும் என்பதோடு உலகுக்கு ஏற்றவாறும் கதிர்காமம் சிறப்பு நகரங்கள், அந்த நகரங்களின் வரலாற்று மதிப்பை பாதுகாக்க அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சில அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து இந்தத் திட்டங்களை உருவாக்குகிறார்கள். அந்த திட்டங்கள் நிலம் பொருந்தாத பல சூழ்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. ஆனால் இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் மீது அல்லது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாரிகளின் பணியால் தான் அரசியல்வாதிகளாகிய எங்களை ஏச்சுகின்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

“கதிர்காமம் புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான தேவையான வசதிகள் வழங்குவதைப் போல புனித பூமியின் மாண்பை பாதுகாப்பதில் உங்களுடைய திட்டமிடல் முக்கியம்” என்று திரு. ரணதுங்க இங்கு மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் புனித பூமி தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக நகரில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்திக்கான கூட்டு திட்டத்தை செயல்படுத்தவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.

“அரசுக்கு எதிரான போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் இருந்தனர்.”- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“அரசுக்கு எதிரான போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் இருந்தனர்.” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் நிலை அரசுக்கு ஏற்பட்டது. தேர்தல் தள்ளிப்போகும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அப்படியொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

கடந்த காலங்களிலே நடந்த விடயங்கள் திருத்தப்படுவது தாமதமானால் பழைய முறையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.

ஐ.தே.க, ஸ்ரீலங்கா கட்சி, மொட்டுக் கட்சி ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒரே கொள்கைக்கு வந்திருப்பது இந்த தருணத்தில் மிகப்பெரிய சாதனையாகும். தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஜே.வி.பி உட்பட சில கட்சிகள் எப்போதும் பெருமையடிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை.

அமைதியான போராட்டத்தை சிலர் அபகரித்தனர். போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் அதில் இருந்தார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வீடுகளை எரித்தல் போன்றவை போராட்டத்தில் இருந்தே ஆரம்பித்தது.

நாட்டில் நிம்மதியாக வாழ்வது, தாம் பெறும் சம்பளத்திற்கு ஏற்ற பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவது போன்ற விடயங்களைத் தவிர மற்றுமொரு போராட்டத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கிறது. பின்னர் போராட்டம் தொடங்குகிறது.

இந்த நெருக்கடியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது . இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர உண்மையான தேர்தலின் தேவை ஒன்று அல்ல.நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.