“மாகாணசபைகளுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை  மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *