அமைச்சர் சரத் வீரசேகர

அமைச்சர் சரத் வீரசேகர

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.

ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம்தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.

இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் – என்றார்.

’18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி” – அமைச்சர் சரத் வீரசேகர புதிய திட்டம் !

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த முன்மொழிவை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பயிற்சி மக்கள் தமது சொந்த காலில் நிற்கவும் தலைமைத்துவ குணங்களை ஊக்குவிக்கவும் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டிற்கு பங்களிக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறைகள் பல நாடுகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளதுடன், இது இளைஞர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நினைவு கூர்வது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர ட்வீட் !

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் பிரத்யேக சொத்து அல்ல. இது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (06.01.2021) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 8 தீர்மானங்களை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்திருந்தார். அவ்வாறே 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்துக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது சரத் வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது என கூறினார்.

இந்த நிலையில் இவை அனைத்தும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்பதை நாம் இம்முறை ஜெனீவா அமர்வில் நிருபிப்போம் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில்,கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு”  – அமைச்சர் சரத் வீரசேகர

“ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில்,கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05.01.2021) உரையாற்றிய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த போது,

2015 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 717 கிலோ போதைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் 2,740 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் குறையவில்லையென சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ‘கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்தும் விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர,

நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் நீதிமன்றங்களில் வழக்கு முடிவடையும் வரை பல ஆண்டுகளாக ஆதாரமாக வைக்கப்படுவதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

எனவே இவ்வாறான கவலைகளை போக்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், சட்ட நடவடிக்கைகளுக்கு மாதிரிகளை வைத்திருந்த பின்னர் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என கூறினார்.

இந்த விவகாரம் சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடப்படும் என்றும் மாதிரிகள் நேரடியாக அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படுமென்றும் தெரிவித்த அமைச்சர், அதே நேரத்தில் போதைப் பொருட்கள் அனைத்தும் வெளிப்படையாக அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது” – சரத் வீரசேகர

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இந்தநிலையில், மேற்படி கூட்டத்தொடர் குறித்து விவரிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. உரிய சாட்சிகளுடன் இதனை நிரூபிப்போம்.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியனவற்றின் அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தாருஷ்மன் குழுவினர் மற்றும்  ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் ஆகியோர் அதற்கு இடமளிக்கவில்லை. இந்த முறை இந்த இரு அறிக்கைகளையும் முன்வைப்பதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்பதைச் சாட்சியங்களுடன் ஜெனிவாவில் சுட்டிக்காட்டுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது. சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளன என்றார்.

“கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்” – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை !

“கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பிலான அமைச்சர் சரத் வீரசேகர, கூட்டமைப்பினர் தொடர்ந்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“போல்பொட், ஹிட்லர் உட்பட சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்தியவர்களின் தலைவர்களது கட்சிகள் முடக்கப்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை இதுவரை தடைசெய்யப்படவில்லை. இதற்கு யுத்தம் முடிந்தபின்னரும் மஹிந்த ராஜபக்ச வழங்கிய கருணையே காரணம்.இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீளுருவாகினால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” – வீரசேகரவுக்கு எம்ஏ.சுமந்திரன் பதில் !

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

“புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் ?  அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே  எம்.ஏ. சுமந்திரன் மேற்கன்டவாறு நேற்று  பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசியதாவது,

“அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர்.

அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.

விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரிப்போரை கண்டுபிடிக்க இன்டர்போல் – அமைச்சர் சரத் வீரசேகர

“விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களை  கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியை நாடவுள்ளோம்” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியில் “வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர் என்றும் இது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் இன்டர்போலின் உதவியை நாடவுள்ளோம். முன்னைய அரசாங்கம் இவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதனால் இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.