“ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில்,கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05.01.2021) உரையாற்றிய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த போது,
2015 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 717 கிலோ போதைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் 2,740 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் குறையவில்லையென சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ‘கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்தும் விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர,
நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் நீதிமன்றங்களில் வழக்கு முடிவடையும் வரை பல ஆண்டுகளாக ஆதாரமாக வைக்கப்படுவதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
எனவே இவ்வாறான கவலைகளை போக்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், சட்ட நடவடிக்கைகளுக்கு மாதிரிகளை வைத்திருந்த பின்னர் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என கூறினார்.
இந்த விவகாரம் சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடப்படும் என்றும் மாதிரிகள் நேரடியாக அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படுமென்றும் தெரிவித்த அமைச்சர், அதே நேரத்தில் போதைப் பொருட்கள் அனைத்தும் வெளிப்படையாக அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.