அமைச்சர் சரத்வீரசேகர

அமைச்சர் சரத்வீரசேகர

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களை கைது செய்து சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் ” – அமைச்சர் சரத்வீரசேகர

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர

தொலைக்காட்சி பேட்டியொன்றின் போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் . அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒன்று இடம்பெறும்போது எங்களிற்கு இது குறித்த புலனாய்வு தகவல்கள் கிடைத்துவிடுகின்றன நாங்கள் நீதிமன்ற உத்தரவை பெற்றோம்.

நாங்கள் அவர்களை கைதுசெய்வதை அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதை சுமந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விரும்புகின்றார்கள்.

இதன் காரணமாக நாங்கள் சகிப்புதன்மையுடன் நடந்துகொண்டோம்,ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்களிடம் அவர்களின் படங்கள் உள்ளதால் அவர்களின் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்த தனிநபர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் . எங்களால் அவர்களிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும்.

நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம்,இதன் காரணமாக நீங்கள் அச்சப்படதேவையில்லை. நாங்கள் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்,அடுத்த சில நாட்களில் நாங்கள் வழக்குகளை தாக்கல் செய்வோம், சுமந்திரனிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்,நான் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பை விலக்கிக்கொண்டேன்.” எனவும் கூறியுள்ளார்.

 

“இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு ஆதரவாக ரஸ்யாவும் சீனாவும் உள்ளன” – அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை !

“இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு ஆதரவாக ரஸ்யாவும் சீனாவும் உள்ளன” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவு புத்திசாலித்தனமானது. தற்போது எங்களால் சுதந்திரமாக பதில்களை வழங்க முடியும் அதனையே நாங்கள் செய்கின்றோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை எழுப்பிய கேள்விகளிற்கு முன்னைய அரசாங்கத்தினால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் முடிவு எங்களுக்கு உதவியுள்ளது. மனித உரிமை பேரவை தீர்மானங்களை கொண்டுவரலாம் ஆனால் நாங்கள் அதற்கு கட்டுப்படவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னர் இணை அனுசரணை வழங்கியதால் எங்களிற்கு பொறுப்பு இருந்தது தற்போது எங்களிற்கு அது இல்லை. குற்றச்சாட்டு குறித்து நாங்கள் பதில் அளிக்கலாம்.

தடைகள் ஏதாவது விதிக்கப்படுவது என்றால் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையே தடைகளை விதிக்கவேண்டும். எங்களிற்கு ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச்சபையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” எனவும் தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் .

 

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார்” – அமைச்சர் சரத்வீரசேகர

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடரடபில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார். நான் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் எங்கள் ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும் ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார். நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன் மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவரை அது பிழையான விடயமாக காணப்படுகின்றது.

தற்போதைய நிலைமக்கு முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவையே குற்றம்சாட்டவேண்டும். முன்னைய அரசாங்கத்தின் சார்பில் அவரே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இனண அணுசரணை வழங்கினார்.
இது துரோகமாகும்.

இலங்கைமக்கள் அச்சப்படத்தேவையில்லை ஜனாதிபதி அவர்களை நன்கு பார்த்துக்கொள்வார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி !

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்” என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கேள்வி – தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது ? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு  அமைச்சர் பதில் கூறும்போது  “அது தவறு,அவர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிலளித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன், அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார். ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது,போல் பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல் போய்விட்டது.சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது அது போல இங்கும் நடைபெற்றிருக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள் எனவும் குறித்த பேட்டியில் தெரிவித்த அவர் “விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார்” எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பிற்கு அளிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது எனவும் பேட்டியில் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார் எனவும் சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

“தமிழர்களின் அமைதி போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்தார்கள்” – மாவை சேனாதிராஜா

அண்மையில் பாராளுமன்றில் அமைச்சர் சரத்வீரசேகர “விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென ” குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக பல தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவ மய சிந்தனையின் வெளிப்பாடாகும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்து தொடர்பில் கருத்துரைக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார். உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசால் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்த நாட்டில் வளர்ந்தார்கள்.

எனவே, தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் கொள்கையையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசுகளினாலும் அழித்துவிடமுடியாது. தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.