“தமிழர்களின் அமைதி போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்தார்கள்” – மாவை சேனாதிராஜா

அண்மையில் பாராளுமன்றில் அமைச்சர் சரத்வீரசேகர “விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென ” குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக பல தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவ மய சிந்தனையின் வெளிப்பாடாகும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்து தொடர்பில் கருத்துரைக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார். உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசால் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்த நாட்டில் வளர்ந்தார்கள்.

எனவே, தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் கொள்கையையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசுகளினாலும் அழித்துவிடமுடியாது. தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *