வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் வைத்து ஊசி அர்ச்சுனா வெளியிட்ட நேரலை வீடியோ – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் – சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.

 

EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

 

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

 

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

 

நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

 

நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

டொக்டர் அர்ச்சுனா சாவகச்சேரிக்கு வரலாம்? போராட்டம் தொடர வேண்டும்! : காணொலி

டொக்டர் அர்ச்சுனாவின் ஆறுநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில், தான் தற்போதும் பொறுப்பிலிருப்பதாகத் தெரிவிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தான் செல்ல இருப்பதாக டொக்டர் அர்ச்சுனா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். டொக்டர் அர்சுனாவை மத்திய அரசே நியமித்த காரணத்தால், நாளை தனக்கு இடமாற்றம் தரப்பட்டால் அதற்குக் கட்டுப்படுவேன் எனத் தெரிவித்துள்ள அவர், இடமாற்றக் கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வழங்கப்படாவிட்டால் தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியைத் தொடருவேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக நேற்றையதினம் (13) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவக் குழுவினரும் சாவகச்சேரி மருத்துவமனை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தற்போது பொறுப்பேற்றுள்ள மருத்துவ குழுவினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்ததுடன், மூன்றுநாட்கள் திடீர் போராட்டத்தை நடத்த உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்டு துளைத்தெடுத்தனர். டொக்டர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாளை சாவகச்சேரிக்கு டொக்டர் அர்ச்சுனா வருவார் என்ற நம்பிக்கையில் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக பதின்ம வயது முதல் மக்கள் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளரும் லண்டன் கம்டன் கவுன்சிலில் புரஜக்ற் மனேஜராக இருந்து ஓய்வுபெற்று 2009 முதல் யாழில் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் மயில்வாகனம் சூரியசேகரம் இந்த மக்கள் போராட்டம் பற்றிய கள யதார்த்தத்தை தேசம்நெற் நேயர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.

._._._._._.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் சீரற்ற பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாலும் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்களின் பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.