எம்.ஏ.சுமந்திரன்

எம்.ஏ.சுமந்திரன்

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது அனுர தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – எம்.ஏ. சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​ தெரிவித்தார்.
அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

கடந்த வாரம் கஜேந்திரகுமார் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்த வேட்பாளர் இன்று தமிழரசுக்கட்சி வேட்பாளராக மனுத்தாக்கல்- வெளியானது தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ.டினேசன் மற்றும் சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன்  தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்திருந்தது.

இதேவேளை கடந்த வாரம் தமிழ் மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என பெயர் குறிப்பிடப்பட்டு பதாகைகள் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா என்பவர் இன்று தமிழரசுக்கட்சி சார்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சி சார்பாக பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் இயங்கி வரும் பலருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாமல் வேறு கட்சியில் இருந்து திடீரென தமிழரசுக் கட்சுக்குள் வந்தவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள்!

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று (2.10.2024) புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாடு முழுவதும் மதுபானச் சர்ச்சை நிலவுகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து இந்த அதிகூடிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அப்படியானவர்களை விலக்கி வைக்கலாம். இது ஒரு சமூக விரோதச் செயற்பாடு. நாட்டிலே மதுபோதை தொடர்பில் சமூக மட்டத்தில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.

இளையவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்கின்றது. அப்படியான நிலையிலும் மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

ஆகையினால் அவர்கள் யார் என்பதை நாடறிய வெளிப்படுத்த வேண்டும் இதேநேரம் மக்கள் சேவைக்கு வருபவர்களுக்கு மிக அதிகமான சலுகைகள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஆகையினாலே இந்தச் சலுகைகளைக் குறைக்க எமது பூரண ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை சலுகைகள் தேவையற்றது.

அதிகமான சலுகைகளைக் குறைக்கின்றபோது நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

தமிழரசுக்கட்சியின் தீர்மானங்களை மீறியோருக்கு கட்சியில் இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களை மீறிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படக் கூடாதெனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படும் விதம் குறித்து தினகரனுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது பற்றி விளக்குகையில்,

தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்கள் இதற்கு முன்னரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்றுமே தேர்தல் நியமனம் கொடுக்கப்பட்டதில்லை.

முன்னர் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் எங்களுடைய கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் எடுத்த சில நாட்களில், மன்னாரைச் சேர்ந்த சிவகரனும், அனந்தி சசிதரனும் அதற்கு மாறாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியதன் காரணமாவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அவ்வாறிருக்க இந்தத் தடவை கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, பலர் செயற்பட்டிருக்கிறார்கள். ஒரு தீர்மானமல்ல பல தீர்மானங்ளை மீறியிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென்பது இறுதியாக எடுத்த தீர்மானம். அதற்கு முன்பாகவே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் தெளிவாக நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல பொதுவேட்பாளரை போட்டியிலிருந்து விலகுமாறும் கூட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு பொது வேட்பாளரிடம் விளக்கமும் கோரப்பட்டது. பொதுவேட்பாளருக்கு ஆதாரவாக பிரசாரம் செய்வதற்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தோம்.

அவர்களுக்கு நியமனம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நியமனக் குழுவே இறுதி முடிவெடுக்கும். நான் தனியாக முடிவெடுக்க முடியாது ஆனால் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், கட்சியின் தீர்மானங்ளை மீறும் எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தனித்து போட்டியிடுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (30) திங்கட்கிழமை மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.

அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

ஆகவே, நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள், யுவதிகள், ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

 

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்தது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது – கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.

குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தற்கு  சஜித் பிரேமதாச தனது நன்றியை தன்னுடையX தளப்பதிவில்  தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது – சுமந்திரன்

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ்மக்கள்  மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  .

வடமராட்சியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டிலும் தங்களது ஆணை கிடைத்ததாக சொன்னார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களுக்குள் வகுத்துக் கொண்டுத்தான் 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் எங்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் கடந்து போக முடியவில்லை, அது போகவும் முடியாது.

ஏனென்றால் திடகாத்திரமாக தீர்மானமாக எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டிற்கே வாக்களித்து கொண்டிருக்கின்றோம். அந்த ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.