முல்லைத்தீவு, புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் எக்காரணம் கொண்டும் ஷெல் தாக்குதலை நடத்தவில்லை. குறித்த வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது 18மாதக் கைக்குழந்தை மற்றும் வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதுடன் 300 பேர் படுகாயமடைந்ததாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்து தொடர்பில் கேட்டபோதே பிரிகேடியர் மேற்கண்டவாறு கூறினார். இராணுவ பேச்சாளர் கூறியதாவது
இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம்பெறுகின்ற பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவென்றே அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்குள் தங்கியுள்ள பொதுமக்கள் மீது இரு தரப்பும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என்பதே அரசாங்கத்தினதும் உலக நாடுகளினதும் வேண்டுகோளாகவும் உள்ளது. இந்நிலையில் குறித்த பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை.
புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது படையினர் ஷெல் தாக்குதலை நடத்தினர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் எவ்வித உண்மையும் இல்லை. இதனை படையினர் முற்றாக மறுக்கின்றனர். படைத்தரப்பின் மீது வீணான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.