“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” – துரைராசா ரவிகரன்

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாளிகளை பெரும்பான்மையின மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருந்தூர் மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.  குருந்தூர் மலையும், குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமமும் தமிழ் மக்களுக்கு உரியவையாகும்.  முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியானது சைவத் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும். அங்கு பரம்பரை பரம்பரையாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் பாரியளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமாத்திரமின்றி தேன் எடுத்தல், மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் அங்கு வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறாக, தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்கள் நெல் மற்றும் சிறுதானியங்களுடனும், பால், தயிர், நெய், தேன், இறைச்சி என்பவற்றோடு பாலை, வீரை, முரளி உள்ளிட்ட காட்டுப் பழங்களை உணவுகளாக உட்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்துவந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு கிராமத்தை தழுவி ‘நிலக்கிளி’ எனும் நாவல் இலக்கியமொன்று எழுதப்பட்டுள்ளது. அந்த நாவலை எழுத்தாளர் அண்ணாமலை பாலமனோகரன் எழுதியுள்ளார். தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்களின் வாழ்வியலை இந்நாவல் தெளிவாகக் கூறுகிறது. அந்த நாவலில் கூட எமது தமிழ் மக்கள் குருந்தூர் மலையில் சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சைவ வழிபாட்டு அடையாளமான சூலம் இருந்ததாகவும் குறித்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்த தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்கள், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். குறிப்பாக, 1984இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பின் பக்கத்து கிராமங்களான ஆண்டான் குளம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு இடப்பெயர்வை சந்தித்த தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களிலேயே குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களில் இதுவரையில் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவை தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரியும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இவ்வாறு அங்கு வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.  அந்த திட்டத்தின்படி, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை என்பதுடன், தண்ணிமறிப்பு பாடசாலை தற்போது பூதன்வயல் கிராமத்தில் இயங்கிவருகிறது.

இவ்வாறான சூழலில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, எம்மை குருந்தூர் மலைப் பகுதிக்குள் போகவிடாமல் தடுத்து, அங்கிருந்த சைவ வழிபாட்டு அடையாளமான திரிசூலத்தையும், முன்னே இருந்த கல்லையும் காணாமல் ஆக்கியுள்ளனர். அத்தோடு, அங்கு புதிதாக பாரியளவில் விகாரையொன்று நிறுவப்பட்டது.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையில் விகாரையை அடாத்தாக அமைத்துவிட்டு, அதை பௌத்த சின்னமாக அறிவிக்க கோருவது மிகவும் அபத்தமானது.

மேலும், அங்கே அகழ்வாய்வுகளின்போது சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருந்தது. அவ்வாறு அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சிவலிங்கமானது எட்டுப் பட்டை கொண்ட எண்முகத் தாராலிங்கம் என பல ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டது. குறித்த சிவலிங்கம் பல்லவர் காலத்துக்குரியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவ்வாறு பெறப்பட்ட சிவலிங்கத்தை எடுத்து தற்போது பௌத்த விகாரையின் உச்சிப் பகுதியில் வைத்துள்ளனர். இந்த சிவலிங்கத்தை விகாரையின் ஒரு பாகமாக சித்திரித்துள்ளனர்.

இப்படியாக அங்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு எமது தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

தற்போது எமது தமிழர்களின் பூர்வீகம், இருப்பு, பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றை கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசாங்கமும் பௌத்த சிங்கள பெருந்தேசியமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்படுவதை எம்மால் உணரமுடிகிறது.

குருந்தூர் மலையில் அகழ்வாய்வு என்ற போர்வையில் அங்கிருந்த தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன. அதேவேளை அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடத்தைப் போன்று சித்திரிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு பூர்வீகத் தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள், தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் உள்ளடங்கலாக சுமார் 632 ஏக்கர் காணிகளை விகாரைக்குரிய காணிகளாக அபகரித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் போலியான வரலாற்றுத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், ஜயந்த சமரவீர குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவிக்கும்படி கூறுகின்றார்.

இவ்வாறாக எமது தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தை அத்துமீறி அபகரித்து வைத்துக்கொண்டு, தமிழர்களின் வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு, அதற்கு மேல் பௌத்த வரலாறுகள் இங்கு புதிதாக எழுதப்படுகின்றன.

இதன் மூலம் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. தமிழர்களான எமக்கு இந்த நாட்டிலே வரலாறுகள் இல்லை. தமிழர்கள் இந்த நாட்டில் ஏதிலிகளாக வந்தவர்கள் என காட்டுவதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான எம்மால் சிங்களத்தின் இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்தது என பொய்களை கூறும் பௌத்த துறவிகள், சிங்கள கடும்போக்காளர்கள், சரத் வீரசேகர மற்றும் இந்த ஜயந்த சமரவீர போன்ற சிங்கள இனவாதிகளாலேயே இங்கு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவித்தால் இங்கு இனங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அந்த ஆயுதப் போராட்டத்தால்  எமது தமிழ் மக்கள் பல உயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நலிவடைந்திருக்கின்ற எமது மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தள்ளுவதற்கு இந்த சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மையின மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்த இனவாதிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21) துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜயந்த சமரவீர என்னும் இனவாதி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், நாம் கடந்த 20ஆம் திகதி (வியாழக்கிழமை) குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதாக இருக்கவில்லை. அப்படியிருக்கும்போது தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மை இன மக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக அவர் இவ்வாறு போலியான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர போன்றவர்கள் தெற்கில் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக போலியான, இனவாதத்தைத் தூண்டும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அவர்கள் பாராளுமன்ற கதிரைகளில் அமர வேண்டுமெனில், இவ்வாறு இனவாதத்தை கக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் தமது அரசியல் இருப்புக்காக எதையும் செய்யக்கூடிய அரசியல் மனநோயாளிகள் என்றே சொல்லவேண்டும்.

கனேடிய உயர்ஸ்தானிகரை வெளியேற்றச் சொல்வது, முல்லைத்தீவு தமிழ் நீதிபதியை விமர்சிப்பது, கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தவர்களை இந்த நாட்டிலிருந்து நீக்கச் சொல்வது உள்ளிட்ட விடயங்களை பார்க்கும்போது, சரத் வீரசேகரவை இந்த அரசியல் மனநோய் எவ்வளவு தூரம் ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

அதேபோல ஜயந்த சமரவீரவும் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி, தமிழர்களின் தொல்லியல் இடத்தை பௌத்த தொல்லியல் இடமாக அறிவிக்குமாறு கூறி, தெற்கில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் மீது இனவாதத்தை விதைத்து, அப்பாவி சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளை அறுவடை செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் மனநோய் உள்ளவர்களை தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் இனங்கண்டு, இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும்.

தமிழ் மக்களான நாங்கள் எமது பூர்வீக வாழ்விடங்களில் எமது பூர்வீக, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுடன் சிறப்பாக வாழ விரும்புகின்றோமே தவிர, இவ்வாறான இனவாதத்தையோ, பிரிவினையையோ, வன்முறையையோ ஒருபோதும் விரும்பவில்லை என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *