நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.
இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.
இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.