உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணியை பணித்திருந்தது.
அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அதன்பின்னர், 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்கொட் போலன்ட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.
முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.
இரண்டு தடவைகளும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்து உலகக்கிண்ணத்தை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.