இலங்கையில் 75 லட்சம் பேர் தீவிர உணவுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வு அறிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 75 லட்சம் பேர் தீவிர உணவுப் பிரச்சினைக்கு (உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு) முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 33 வீதமாகும்.
அத்துடன், ஆசிய பசுபிக் வலயத்தில் உணவு பாதுகாப்பற்ற 23 நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் இருப்பதாகவும் குறித்த ஆய்வின் போது தகவல் வெளிவந்துள்ளது.
அதேநேரம் எமது நாட்டில் மொத்தமாக 57 இலட்சம் கும்பங்களில் 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு நிவாரணம் அல்லது உதவியை கேட்டிருக்கின்றன.
அத்துடன், மொத்த குடும்பங்களில் நூற்றுக்கு 65 வீதமானவர்கள் அவர்களின் வாழ்க்கைச் செலவை சமாளித்துக்கொள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாகவும் குறித்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார்.