பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிய மறுப்பு – இம்ரான் மகரூப் விசனம் !

க.பொத. சா/த பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க  தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

பர்தா விவகாரம் : மாணவிகளின் மனநிலையை உளவியல் ரீதியாக புரிந்துகொள்ள  வேண்டும்" - Daily Ceylon

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிய மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் மாணவிகள் பலரும்  முறைப்பாடுகள் கையளித்துள்ள  நிலையிலேயே அவர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கும் பரீட்சை முறைகேடுகளை தவிர்ப்பதற்கும் பரீட்சை மண்டபத்திற்குள் பர்தா அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை முறைகேடுகளுக்கு பர்தா ஆடை காரணம் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் முறை குறித்து முன் கூட்டியே தேவையான விளக்கங்களை பரீட்சை திணைக்களம் பாடசாலைகளுக்கு வழங்கி இருந்தால் இந்த தேவையற்ற பிரச்சினைகளை குறைத்திருக்க முடியும்.

தாம் வழக்கமாக அணிந்துவரும் பர்தா ஆடையை திடீரென நீக்கிக்கொள்ளுமாறு பணிக்கும்போது மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், அவர்களால் பரீட்சையை திருப்தியாக எழுதமுடியாமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, மாணவிகளுக்கு உரிய முறையில் பரீட்சை மண்டபத்தில் தெளிவுபடுத்துவதன் ஊடாக அவர்களின் மனஉளைச்சலை தவிர்க்க முடியும்.

சில பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களும், பரீட்சை தொடர்பான அதிகாரிகளும் முஸ்லிம் விரோதப் போக்கில் செயற்படுவதான குற்றச்சாட்டுக்களும் எம்மிடம் முன் வைக்கப்படுகின்றன. இது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

பர்தாவுக்கான தடையை அனுமதிக்க முடியாது. பரீட்சை மண்டபத்தில் ஏற்படும் இந்த பிரச்சினை தொடர்பில் மாற்றுத் தீர்வொன்றுக்கு செல்லவேண்டியிருக்கிறது.

எனவே, இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் அடுத்தவாரம் சந்திப்பொன்றை முன்னெடுக்கவிருக்கிறோம். அதன்பின்னர் இதுவிடயமாக பாராளுமன்றம் ஊடாக சிறந்த தீர்வொன்றை பெற்று மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *