உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையின தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதிக்கட்டப்போரின்போது வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர் உள்ளடங்கலாகப் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்தும் அதேவேளை, தமக்குரிய நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும்மேல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இருப்பினும் அடிமட்டத்தில் எதுவுமே நிகழவில்லை. மேலும் அவர்கள் சில புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யாருடனும் கலந்துரையாடாமல் இருக்கின்றார்கள்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டவரைபொன்றை முன்வைத்த அவர்கள், அதுகுறித்து அபிப்பிராயம் கூறுமாறு என்னிடம் கேட்டார்கள்.
இருப்பினும் அதுபற்றிக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதில் பொறுப்புக்கூறல் குறித்தோ அல்லது மன்னிப்பு அளித்தல் குறித்தோ எதுவும் இல்லை.
மேலும் காணாமல்போனோரின் உறவினர்களில் பெருமளவானோர் இதுவரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 15 ஆணைக்குழுக்களின் முன்னிலையில் ஆஜராகி, தமது உறவுகள் குறித்து சாட்சியமளித்திருக்கின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அதில் முன்னேற்றங்கள் எவையுமில்லை. பரணகம ஆணைக்குழுவில் முன்னிலையானவர்களே மீண்டும் மீண்டும் அழைக்கப்படுகின்றார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.