சிதைவடையும் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை – எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் மாணவர்கள் !

யாழில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருப்பதாகவும், இப்படியான மோசமான நிலை யாழில் காணப்பபடுவதாக பிரதேச செயலர்கள் கடந்த புதன்கிழமை (31-05-2023) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டும்போதே இவ்விடயத்தை தெரிவித்தனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் தரம் 9 இல் சேர்க்கும்போது அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிவதில்லை. அவர்கள் அந்த வகுப்பிலே பேசாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு பல வகுப்புக்களில் நடைபெறுகின்றன என்று பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவ்வாறு இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பக் கல்வியை சரியாகப் பயிலாத மாணவர்களால் இந்த நிலைமை ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர்.

இதனைத் தீர்ப்பதற்கு பாடசாலைகளில் அவ்வாறான மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்படுகின்றது.

எனினும் இது நடைமுறையில் முழுமையான சாத்தியமான விடயமல்ல என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை, கொரோனா காரணமாக இவ்வாறு ஆரம்பக் கல்வியை முறையாகப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை அண்மையில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை. இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்து பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *