மோதல் பகுதியிலுள்ள பொதுமக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கு உதவவே உதவி அமைப்புகள் விரும்புகின்றனவே தவிர, அவை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானவை அல்ல என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவித்திணைக்களத்தின் ஆசிய, இலத்தீன் அமெரிக்க பிராந்தியத்திற்கான தலைவர் எஸ்கோ கென்ற் கின்ஸ்சி தெரிவித்துள்ளார்.
மோதல் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்து வந்த பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வவுனியா முகாம்களில் அம் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் கிடையாதெனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் கடந்த வார முற்பகுதியளவில் வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு சென்று வந்ததன் பின்னர் கென்ற் கின்ஸ்சி இந்த தகவலை வெளியிட்டிருப்பதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
அத்துடன், வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கத்துக்கு எதிரில்லாத வகையில் உதவி அமைப்புகளுக்கு இலங்கை உதவ வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
“நாம் அவர்களை எதிர்க்கவில்லையென இலங்கை அரசாங்கத்துக்கு நாம் மீள உறுதிப்படுத்த வேண்டும்’ என கென்ற் கின்ஸ்சி தெரிவித்திருக்கிறார். “பங்காளிகளாக இருக்கவே நாம் கேட்கிறோம். அரசாங்கம் சந்தித்துவரும் மனிதாபிமான சவால்களை பூர்த்தி செய்ய உதவுவதே எமது பாத்திரமென நாம் கருதுகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேநேரம், இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு ஆயிரம் என்ற வீதத்தில் அகதிகள் முகாம்களுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இந்த சிரேஷ்ட ஐரோப்பிய அதிகாரி தெரிவித்திருக்கிறார். அத்துடன், அகதிகளாக இடம்பெயர்ந்து வரும் பொதுமக்கள் கொழும்பு அரசாங்கத்தினால் நன்கு கவனிக்கப்பட்டாலும் முகாம்களில் சனநெரிசல் அதிகமென்பதால் சுகாதாரத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“முகாம்களின் தன்மையை பொறுத்தவரை பொதுமக்களை விட அதிகமாக இராணுவத்தினர் இருக்கின்றனர். சுற்றி முட்கம்பிகளால் வேலியும் அடைக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான படையினர் அங்கு இருப்பதுடன் இடம்பெயர்ந்து வந்த மக்கள் (முகாமை விட்டு) வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு நடமாடும் சுதந்திரம் கிடையாது’ என்றும் எஸ்கோ கென்ற் கின்ஸ்சி மேலும் தெரிவித்திருக்கிறார்.