மசாஜ் நிலையங்களில் ஆண்களுக்கு ஆண்களும்,பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லையென சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் கடமைகளில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதால் இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் கூறுகிறார் என்ற வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. அவ்வாறு எந்த சட்டமும் கொண்டுவரப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் என்று எவருமே இல்லை. சுற்றுலா பயணிகளை குழப்பும் வகையில் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன என்றார்.