வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள சிறுவர்களையும் பெண்களையும் உடல், உள ரீதியான தாக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வன்னிப் பிராந்தியத்துக்கான யுனிசெப் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் சேவையில் ஈடுபடும் மூவரடங்கிய யுனிசெப் குழுவினரை வன்னிக்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே யுனிசெப் அதிகாரிகள் இவ்வாறான பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சகல விதமான உதவிகளையும் வழங்கும் அதேநேரம், நீண்டகால நோய்களுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்க உதவுவதாகவும் யுனிசெப் தெரிவித்தது.
இதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்துத்தெரிவித்த கட்டளைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா, யுனிசெப்பின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாகவும் யுனிசெப் அதிகாரிகளுக்கான பாதுகாப்புகளைப் பலப்படுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.