ரி.எம்.வி.பி. தம்மிடமிருந்த அனைத்து சிறுவர் போராளிகளையும் விடுவித்துவிட்டது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வியாழக்கிழமை திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
நீதி அமைச்சர் சுகத் கமலத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் திருமலை மாவட்டத் தலைமைப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோர் முன்னிலையில் இவ்வறிவிப்பினை வெளியிட்டார். இதற்காகவே, இச்செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளின் பெயர்ப்பட்டியலை முதலமைச்சர், பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அந்நிகழ்வில் கையளித்தார். சிறுவர் போராளிகள் தமது அமைப்பில் இருப்பதாக இதுகாலவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கிவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கமலத், யுனிசெப் அமைப்பின் திருமலை மாவட்டப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோரும் பேசினர். இந் நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ” மாணவி வர்ஷாவின் கொலை குரூரத்தனமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இச்சம்பவத்துக்கும் ரி.எம்.வி.பி.க்கும் சம்பந்தமே இல்லை. எமது அமைப்பின் உறுப்பினர் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர் எமது அமைப்பின் உறுப்பினர் என்று வெளியான தகவல் பிழையானது. அந்த நபர் எமது உறுப்பினர் அல்ல அவர் தேர்தல் காலத்தில் வேலை செய்தவராக இருக்கலாம். திருமலையில் உள்ள ரி. எம். வி. பி. அலுவலகங்கள் எல்லாம் இப்போது வேறு கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன. நாம் மக்களிடமிருந்து வரி சேகரிக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் எமது நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்’ என்றும் முதலமைச்சர் கூறினார்.