“நான் இனவாதத்தை ஆதரிக்கும் நபர் அல்ல” என ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன் அவர் விடுத்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது .
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அங்கம் வகித்த காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் (OPFMD) என்ற அமைப்பிற்கு பல்வேறு வழிகளில் ஊடக ரீதியான பங்களிப்பை தாம் வழங்கியுள்ளதாகவும் மேலும் ஜனாதிபதியும், வாசுதேவ நாணயக்காரவும் எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து போராட்டங்களை வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் அவலங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அவற்றை ஜெனீவாவிற்கு எடுத்துச்செல்ல தாம் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து தாம் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த போதிலும் அவை பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் தாம் மேற்கொண்ட ஊடகம் சார் நடவடிக்கைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எழுதப்பட்டது என்றும், தமது முதன்மை மொழியான ஆங்கிலத்தில் வாக்குமூலத்தை எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.