ஐ.தே.க.வை அழிக்க முயன்றவர்களின் சதி முயற்சிகள் முழுமையாக முறியடிப்பு

united-national-party.jpgஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கனவு கண்டவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயிருப்பதாகவும் எதிர்ச்சக்திகளின் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் 24 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினத்தன்று கட்சி புத்தாக்கத்துடனான பயணத்தை தொடரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் திங்கட்கிழமை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டதும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஐ.ம.சு.மு.வின் அராஜக ஆட்சியை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோதே பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் எல்லோரும் ஆவல் கொண்டிருப்பீர்கள். கட்சிக்குள் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும் என்று தடுமாறிக் கொண்டிருப்பீர்கள். கடந்த புதன்கிழமை செயற்குழு நியமித்த விஷேட குழு இதுவரையில் மூன்று சந்திப்புகளை நடத்தி பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காத்திரமான உடன்பாடுகளை எட்டியுள்ளது. இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மேலும் இரண்டு சந்திப்புகள் இடம்பெறவிருக்கின்றன. அச்சந்திப்புக்களின் முடிவில் தயாரிக்கப்படும் சிபாரிசு அறிக்கை திங்கட்கிழமை கூடும் விசேட செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும். அதுவரையில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியை அழிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டவர்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளனர். இக்கட்சி ஜனநாயக கோட்பாடுகளை மதித்தொழுகும் மிகப்பழைய அரசியல் கட்சியாகும். அக்கட்சியில் அனைவருக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும், பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரது கருத்தும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும். அவசியமேற்படுமானால் கட்சியின் யாப்பைக் கூட மற்றுவதற்கு தயக்கம் காட்ட மாட்டோம்.

ஒற்றுமையுடன் கட்சியை பலம் கொண்டதாக மாற்றியமைக்க நாம் உடன்பாடு கண்டுள்ளோம். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் எவருமே செயற்பட முனையவில்லை. அரச தரப்பில் சிலசக்திகள் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்துவிடும் நோக்கில் பின்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றன. கட்சியில் எவரும் அந்தச் சதி வலைக்குள் சிக்கிவிடவில்லை.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினமான அன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரையில் விசேட வழிபாடுகளையடுத்து கட்சி முக்கிய உறுதிப் பிரமாணங்களை எடுத்துக்கொள்ளவிருக்கின்றது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் 112 பேரும் தேர்தல் முடிந்த மறுநாளே தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் உறுதிப்பாடு இதில் முதன்மையானதாகும். இதேவேளை, அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடப்பதற்கு முன்னரே ஒரு வேட்பாளர் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். இதன்மூலமாக ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்மாதிரியைக் காண்பித்துள்ளது.

அடுத்ததாக ஒவ்வொரு வேட்பாளர்களும் சூழலை பாதிக்காத வகையில் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் உறுதிப்பாட்டைச் செய்யவிருக்கின்றனர்.

இறுதியாக மிக முக்கியமானதொரு உறுதிப்பாட்டையும் செய்யவிருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தெரிவாகும் எவரும் தமது பதவிகளை பணத்துக்கோ, பதவிக்கோ தாரைவார்க்கப் போவதில்லை என்பதாகும்’.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *