பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் விசாரணைகளின் பின்னர் இன்று நிராகரிக்கப்பட்டது.

வழக்கின் முதலாம் பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் நிராகரித்ததுடன், அதற்கான  கட்டளையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு இன்று அனுப்பியிருந்தார்.

ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று நிராகரிக்கப்பட்டன.

இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை தாம் வழங்கவில்லை என வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, உயர் பொலிஸ் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் LTTE அமைப்புடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் கடந்த 12 வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *