விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் மீது குறைகூறும் சர்வதேச சமூகம் தப்பிவிடும் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் புலிகளின் செயல் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையினூடாக விரைவிலேயே வடக்கின் அனைத்து பகுதிகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதியில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? என கேட்கலாம்.
றிப்பாக வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன் மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்கவும் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் ஊடாக அவர்களது பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்யும் நிலைமையை உருவாக்குதல். நானே மக்களின் பிரதிநிதி என ஒருவர் தெரிவிப்பதை விடுத்து உண்மையான பிரதிநிதியை மக்களே தெரிவு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குதல், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியுடனேயே நாம் பேசுவோம்.
அதுமட்டுமல்ல வடக்கையும், கிழக்கையும் பிரதானப்படுத்தி நாடுமுழுவதும் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளல் இதுவே எமது இலக்காக இருக்கிறது. இதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முப்படையினர் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. உண்மையிலேயே அவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு படையில் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தொண்டர் அடிப்படையில் இருப்பவர்களதும் சேவைகள் சம மானவை. எனினும் ஓய்வூதிய வழங்குதலில் சமநிலை பேணப் படவில்லை. நீண்டகாலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதி இந்த திருத்தச் சட்டத்தினூடாக தீர்வு வழங்கப்படுகிறது என் றும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.