வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கூறுகையில்,
வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸாரை விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.
அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் , இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு எமது ஆலயங்களில் சில அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகை இதையே கூறுகின்றது எனவும் கூறியிருந்தார்.