நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான முடிவுகளை அமுல்படுத்துவதற்கும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய பல்துறை ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாகவும் 66, 000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் 6.2 மில்லியன் மக்கள் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா அறிக்கை எச்சரித்துள்ள நிலையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு சபையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.