காதலியை சந்திக்க பேருந்தை கடத்திய 15வயது சிறுவன் !

பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண தமது பேருந்துகளில் நேற்று (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​அப்போது பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அங்கு பொலிஸார் உடனடியாக தலையிட்டு இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்தனர். பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளை அவதானிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, ​​கடத்தப்பட்ட பேருந்துதான் சம்பந்தப்பட்ட பேருந்து என்பதை பொலிஸார் உறுதி செய்தனர். விரைந்து செயல்பட்ட பொலிஸார், பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர்.

பின்னர், அவர் தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் ஆனால் அப்போது பேருந்துகள் இல்லாததால், பல பேருந்துகளில் ஏறி சோதனை செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் ஹோமாகம பகுதியில் பேருந்து ஒன்றை கடத்திச் சென்ற சந்தேகநபர் மொரகஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலியை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *