“ஜெனிவா பிரச்சினையில் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் உதவுவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம்.” – சஜித் பிரேமதாச

கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியை அரசாங்கம் நாட்டுக்கு அறிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தங்களின் அரசியல் உரிமை, பாதயாத்திரை உரிமையை நேற்று (நேற்று முன்தினம்) மேற்கொண்டிருந்தது.  இது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உரிமையாகும். என்றாலும் நாட்டில் இன்று அடிப்படை உரிமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர் அமைப்பினருக்கு மிகவும் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் மேற்கொண்டார்கள். கண்ணீர் புகை அடித்தார்கள். இந்த நாட்டில் அடிப்படை உரிமையை மேற்கொள்ள முடியாதா என கேட்கின்றோம். 25பேர்  எந்த காரணமும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் வீதியில் போராட்டம் மேற்கொண்வர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வீதியில் போராட்டம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருக்கின்றதா? இவ்வாறு அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்துகொண்டு, எங்களை சர்வகட்சியில் இணைந்துகொள்ளுமாறு கேட்கின்றனர். எவ்வாறு முடியும்.? கைதுசெய்யப்பட்டுள்ள 25பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுமா என்பதை பிரதமர் தெரிவிக்கவேண்டும்.

நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலைமையில் சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அவ்வாறு இல்லாமல் அமைச்சுப்பதவிகளை எதிர்பார்த்து, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயாரில்லை. தற்போது ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் வரும் காலமே உதயமாகி இருக்கின்றது. செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெற இருக்கின்றது.

இதன்போது எமது நாடு தொடர்பில் விவாதம் இடம்பெறும் என்பதை நாங்கள் மறந்துவிட கூடாது. எமது நாட்டை இக்கட்டான நிலைமைக்கு ஆக்குவதற்கு நாங்கள் தயார் இல்லை.

ஜெனிவா பிரச்சினையில் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் உதவுவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து, மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது எப்படி நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்? அதனால் அரசாங்கம் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு, நாடு தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தியை வழங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *