சென்ற வருடம் ஆஸ்திரியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிருந்த யோசஃப் ஃப்ரிட்ஸல், பாலியல் வல்லுறவு மற்றும் குடும்பத்துக்குள் கூடா உறவு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் தனது மகளையே பல ஆண்டுகள் நிலவறையில் அடைத்து வைத்ததோடு மகளுடனே உறவுகொண்டு ஏழு பிள்ளைகளை பெற்றிருந்தார் என்ற விபரங்கள் சென்ற ஆண்டு வெளியாகியிருந்தன. வியன்னாவுக்கு மேற்காக செயிண்ட் பொயல்டன் என்ற நகரில் ஃபிரிட்ஸல் மீதான வழக்கு திங்களன்று ஆரம்பமானது.
மகளை அடிமைப்படுத்திவைத்திருந்தது மற்றும் பிறந்தவுடன் இறந்துபோன ஒரு குழந்தையின் மரணத்துக்கு அவரே பொறுப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
நீதிமன்றத்திற்குள் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டபோது, ஒரு நீல நிற ஆவணக் கோப்பினால் அவர் தனது முகத்தை மறைத்துக்கொண்டார். இந்த வழக்கின் பெரும்பகுதி பொதுமக்கள் பார்வைக்கு இடமின்றி நடக்கிறது. விசாரணை ஒரு வாரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.