அரசியலமைப்பு பேரவைக்கு 12 வருடம் சிறையிருந்தவரை நியமிக்க முடியாதென்றால் கருணா, சந்திரகாந்தன் நியமனம் எவ்வாறு? – ரணில்

ranil-wickramasinghe.jpgஅரசிய லமைப்புப் பேரவையை அமைப்பதில் அரசாங்கம் திட்டமிட்டு காலம் கடத்துவதாகக் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து உடனடியாக அதனை அமைக்குமாறு வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

சிறிய கட்சிகளால் சபாநாயகரிடம் சிபாரிசு செய்யப்பட்டவர் 12 வருடங்கள் சிறை சென்றவர் எனக்காண்பித்து பெயர் குறிப்பிடப்படாத மனுவொன்றை வைத்து வைத்து அவரது பெயரை நிராகரிக்க முனையும் அரசு நாட்டில் பயங்கரவாதத்திலீடுபட்ட சந்திர காந்தனுக்கு முதலமைச்சர் பதவியையும், கருணாவுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கியதை எந்த வகையில் நியாயப்படுத்தப் பார்க்கின்றது. எனவும் எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடந்த கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்புப் பேரவையை அமைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லையெனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதமரும் நானும் உரிய பெயர்களை அறிவித்துவிட்டோம். அத்துடன் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு மூவர் நியமிக்கப்படவேண்டும். இவர்களில் விஸ்வநாதன் என்பவரது பெயர் இரண்டு வருடங்களுக்கு முன்பே சிபாரிசு செய்யப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு எதிரான முறைப்பாட்டைத் தெரிவிக்க முற்படுகின்றனர். அத்துடன் சிறிய கட்சிகள் சார்பாக சிபாரிசு செய்யப்பட்டிருப்பவர் 12 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் என்று பெயர் குறிப்பிடாத ஒருவரால் பிரதமரிடம் மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மனு பரிசீலக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன். இது தேவையற்றதொரு விடயமாகும். 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தது குற்றமாக கருதப்படுமானால் முழுக்க முழுக்க பயங்கரவாத நடவடிக்கைகளிலீடுபட்டு படுகொலைகளைச் செய்த சந்திரகாந்தனுக்கு முதலமைச்சர் பதவியும் கருணாவுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயமானது எனக் கேட்கவிரும்புகின்றோம்.

இவ்வாறாக பொறுப்பற்ற விதத்தில் அரசு காரணம் கூறி காலம் கடத்தாமல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசியலமைப்புப் பேரவையை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து வலியுறுத்தவிருக்கின்றேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி கொள்ளச் செய்வதன் மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வழிவகுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *