மத்திய பகுதியில் இருப்பதால் போர்விபரம் தெரியாது; முத்து சிவலிங்கம் இந்தியாவால் மட்டுமே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறியுள்ளார். தமிழ்நாடு கும்பகோணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், இலங்கைத் தோட்ட உட்கட்டமைப்பு துறைப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், கல்வி அமைச்சர் சச்சிதானந்தம், அரசியல் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக நிருபர்களிடம் முத்துசிவலிங்கம் கூறியதாவது; இலங்கைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்தியா, இலங்கை இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டனர். போரைத் துவக்கி விட்டனர். நாங்கள் மத்திய இலங்கைப் பகுதியில் இருப்பதால் போர் குறித்த முழு விபரம் தெரியவில்லை. பத்திரிகை செய்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனாலும், இந்தியாவால் மட்டுமே இலங்கைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கையில் விரைவில் அமைதி ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லது.