ஐ.தே.கவினுள் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை. பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பெரும் குழப்பம்; சூடான விவாதம்

ranil-wickramasinghe.jpgஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதையடுத்தே கூட்டத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க.வின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார். கட்சியின் நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராய்வதற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்த வேளையில், கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்திக் குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டுமெனக் கோரி பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் செனவிரட்ன இதற்கான பிரேரணையை முன்மொழிந்தார். ரஞ்சித் மத்துமபண்டார எம்.பி இதனை வழிமொழிந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக நீக்கும் வகையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நேற்று காலையில் ஐ. தே. க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கட்சியின் இணைச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் செனவிரத்னவினால் முன் வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மொனராகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார வழிமொழிந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் செனவிரத்ன உரையாற்றுகையில், ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக இருந்து கொண்டு எடுக்கும் தவறான தீர்மானங்களே இன்று ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்தான நிலைக்குச் சென்றதற்கான காரணமாகும்.

கட்சி எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணாமல் கால தாமதப்படுத்துவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கிராமப் பிரதேசங்களில் நூற்றுக் கணக்கில் ஐ. தே. க. உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்கின்றனர். இதனால் கட்சி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.  இந்த நிலையிலிருந்து கட்சியைக் காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் இனி ஒருபோதும் முடியாது என்றார். கட்சியின் உபதலைவர் ருக்மன் சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், இனியும் வீணாக காலத்தைக் கடத்தாமல் ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

காமினி ஜயவிக்ரம பெரேரா, டொக்டர் ஜயலத் ஜயவர்தன, ஜோன்ஸன் பெர்னாண்டோ மற்றும் தயாசிறி ஜயசேன ஆகிய உறுப்பினர்களும் இதனை வரவேற்றுப் பேசினர். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகளின் பின்னர் ஐ. தே. க. உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். தலைமைத்துவத்தின் தவறான வழிகாட்டல் காரணமாக தொடர்ச்சியாக 14 தேர்தல்களில் ஐ. தே. க தோல்வியுற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்தன ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவாகப் பேசினார். இந்திக பண்டாரநாயக்க அதற்கு பதில் கூற முனைந்த போது சபையில் சூடான விவாதம் இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது எவ்வித தீர்மானமும் இன்றி பாராளுமன்றக் குழுக் கூட்டம் முடிவடைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *