இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்சவையும் – ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் அன்று நள்ளிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் எரியூட்டப்பட்டது.
எரியூட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தொடர்பான அனுதாப அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வீடு ரணிலின் ஒரே ஒரு வீடு. அஙங்கு சுமார் பழமையான 2000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்பட்டன. இந்த வீடு பாடசாலை ஒன்றிற்காக வழங்கப்பட்ட வீடு என்றெல்லாம் அனுதாப அலைகள் வீசின.
இதன் போது நேற்றைய தினம் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட முன்பு அவருடைய வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்ரே வீடு தீமூட்டப்பட்டதாக அந்த காணொளி நீள்கிறது. உண்மையில் புத்தகங்களும் – எந்த முக்கியமான ஆவணங்களும் ரணில் விக்கிரமசிங்க வீட்டிலிருந்து எரியவில்லை – எரிக்கப்படவில்லை.
எனினும் ரணில் விக்கிரமசிங்க வீடு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய போது “ இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும் தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும் அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என தெரிவித்துள்ள ரணில், எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறு நடந்துகொள்பவர்கள் ஹிட்லரின் சிந்தனையைக் கொண்டவர்கள் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
கடந்த போராட்டங்களின் போது சுமார் 30 ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்ட போதும் இந்த மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது எந்த வன்முறை சம்பவங்களும் பெரிதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 9ஆம் திகதி போராட்டம் என்றவுடன் பிரதமர் இல்லமும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டது. ஆகவே வீட்டை எரிப்பதற்கான சந்தர்ப்பம் அரிதினும் அரிது.

இந்த நிலையில் குறித்த வீடியோ சில கேள்விளை எழுப்பியுள்ளது..?
- வீட்டை எரிப்பதற்காக வந்தவர்கள் எப்படி தேவையான புத்தகங்கள் – முக்கியமான புத்தகங்கள் – முக்கியமான ஆவணங்கள் என்பவற்றை கண்டுபிடித்து பத்திரப்படுத்திவிட்டு எரித்தார்கள் ..?
- வீட்டை எரிப்பதற்காக வந்தவர்களுக்கு எப்படி இவ்வளவு கால அவகாசம் கிடைத்ததது..?
- யாருடைய வீடுகளும் எரிக்கப்படாத குறித்த நாளில் – குறித்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மட்டும் எரியூட்டப்பட்டது எப்படி..?
- ஹிட்லரின் கூட்டம் என ரணில் கூறிய வன்முறை கூட்டத்துக்கு இந்த ஆவணங்கள் மீது மட்டும் என்ன தனிப்பட்ட கவனம்..?
- வீடு எரிக்கப்பட்ட போது வீட்டில் யாருமே இல்லையே எப்படி..?
இப்படியாக விடை கிடைக்காத பல கேள்விகள்.
பசில் ராஸபக்ஷ, மகிந்த ராஸபக்ஷ ஆகியோர் பதவி விலகிய போது ராஸபக்சஆட்சி முழுமையாக கவிழ்ந்து விடும் அபாயம் காணப்பட்ட நிலையில் கோட்டாபாயவின்ஆட்சியை பாதுகாக்க ரணில் பிரதமராக பதவி ஏற்றார். கோட்டபாய அரசு மீதான மக்களின் கோவம் தன்னுடைய – தனது கட்சியினுடைய எஞ்சிய காலத்து அரசியலுக்கும் தடையாக அமைந்து விடும் என்பதால் மக்கள் அனுதாப அலையை தேடிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றிய திட்டமிட்ட நாடகமாக கூட இது இருக்கலாம்.
சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துளதாம் எரிந்த வீட்டின் எரியாத பக்கங்கள் தொடர்பில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன இன்னமும் நடக்கப்போகிறது என.
ரணிலுக்கு சார்பான தென்னிலங்கை ஊடகங்கள் பலவும் ரணில் வீட்டில் எரிந்ததாக கூறி எரியாத 2500 புத்தகங்களை பற்றி பேசி ரணில் மீதான அனுதாப அலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த 2500 நூல்களை விட மிகப்பெறுமதியான சுமார் 90000 புத்தகங்களையும் – ஏட்டுச்சுவடிகளையும் கொண்டிருந்த ஆசியாவின் முக்கியமான நூலகமான நமது யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைப் பற்றி இந்த தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதே கிடையாது என்பதே உண்மை.