“அதிகாரத்தை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு கற்றுக்கொடுக்க நான் தயார்.”- சபையில் பிரதமர் !

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்பிக்க தயாராக இருப்பதாகவும் அதற்காக தன்னை வந்து சந்திக்குமாறும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போதேஅவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று நான் கற்பித்துள்ளேன். நான் இரண்டு மூன்று முறை ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளேன். இலங்கையில் தற்போது இருக்கும் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான எதிர்க்கட்சி. கட்டாரில் இருந்து இயற்கை எரிவாயுவை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். பெற்ரோலை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு பெற்ரோலே தேவை. கட்டாரில் பெற்ரோலை கொள்வனவு செய்ய முடியாது.

துபாய், குவைத், ஓமான் போன்ற ஏனைய நாடுகளிலேயே பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியும். ரணசிங்க பிரேமதாச அரச தலைவராக இருந்த போது அவரது பிரதிநிதியாக நானே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றேன்.

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. நான் ஜப்பானுக்கு சென்றதும் ஜப்பான் 600 மில்லியன் டொலர்களை வழங்கியது. அன்றைய ஜப்பான் பிரதமர் வழங்கிய பணம் காரணமாக அன்று குவைத் போரின் போது இலங்கை தப்பியது.

அந்த காலத்தில் இருக்காதவர்களுக்கு இதனை நினைவுப்படுத்த வேண்டும். கழித்தல் 7 புள்ளியில் இருக்கும் பொருளாதாரத்தை எப்படி உடனடியாக ஆறு மாதத்தில் கூட்டல் புள்ளியாக மாற்ற முடியும் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் பதிலளிக்கவில்லை.

தற்போது 20 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல், மோசடிகளை நிறுத்தினால், 2 பில்லியன் டொலர்கள் மீதமாகும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத இப்படியான எதிர்க்கட்சி குறித்து நான் வருத்தப்படுகிறேன்.

அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படி என்று நான் பழக்கினேன். இரண்டு, மூன்று முறை நான் அதிகாரத்தை கைப்பற்றினேன். இவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் வாருங்கள், நான் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கற்பிக்கின்றேன்.

வெறுமனே கூச்சலிடுவதால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும். அதனை செய்ய முடியாது, இந்த இடத்தில் கூச்சலிடுவதால், இவர்களில் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

உண்மையில் தற்போது இருப்பது இலங்கையில் மிகவும் பலவீனமான எதிர்க்கட்சி என்பதை கூறவிரும்புகிறேன். அதிகாரத்தை கைப்பற்ற முடியாது வெறுமனே கூச்சலிட்டு பயனில்லை. தட்டிகளை தூக்குவதால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அதிகாரம் என்பதை கையில் எடுத்துப்பெற வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

பிரதமருக்கு வரலாறு மறந்து போயுள்ளது. ரணசிங்க பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவை, 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தில் பெயரளவில் வைத்துக்கொண்டார். எனது தந்தையே பிரதமருக்கு கற்றுக்கொடுத்தார். பாடம் கற்றுக்கொள்ள தன்னிடம் வருமாறு பிரதமர் கூறுகிறார். நாங்கள் அவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பாடத்தை நன்றாக கற்றுக்கொடுத்துள்ளோம்.

தனியாக அவர் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து தனியாக அமர்ந்து இருக்கின்றார். தற்போது எங்களை கற்றுக்கொள்ள வருமாறு கூறுகிறார் எனக் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *