போர்நிறுத்த உடன்படிக்கையை நியாயப்படுத்துகிறார் ரணில்

ranil.jpgபோர் நிறுத்த உடன்படிக்கையின் மூலமாக வடக்கையும் கிழக்கையும் பிரபாகரனுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருந்தால் 2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பேன் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினூடாக நாட்டின் இறைமையை அரசாங்கத்தால் பாதுகாக்க முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரபாகரனை தனிநாட்டுக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கச் செய்ய முடிந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கெஸ்பாவையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க கூறியதாவது;

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எமது படைத்தரப்பினருக்கு மட்டுமே உரித்தானது என்பதை அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்றுக் கொண்டார். அதனூடாக வடக்கு, கிழக்கு கடற் பிரதேசத்தையும் முழு நாட்டினதும் அதிகாரத்தை எமது அரசாங்கத்தால் பாதுகாத்து உறுதி செய்ய முடிந்தது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஒருநாடு ஒரு அரசாங்கம் என்பதை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு அன்று முதல் தனிநாடு என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது உலகின் ஏனையநாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே காணமுடிகிறது. உலகின் ஏனைய நாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அரசுகளும்தீவிரவாத அமைப்புகளும் தத்தமது பிரதேசங்களை தற்காலிகமாக வேறுபடுத்திக் கொண்டன. இங்கு அவ்வாறு நடக்கவில்லை, முழு ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசிடமே உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவுக் கடல் எல்லையின் உரிமை தமது அமைப்பிடமே இருப்பதாகக் கூறி வந்த விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அந்த உரிமை அரசுக்கே உரியது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு கடல் எல்லையின் உரிமையை போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நான் தாரை வார்த்துக் கொடுத்ததாகக் கூறி இன்றைய அரசிலுள்ளவர்களும் சில தீய சக்திகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். அது உண்மையாக இருந்தால் விடுதலைப்புலிகள் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டு என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லையே. என்னை எப்படியும் தோற்கடிக்கவேண்டு மென்பதற்காகவே அந்த தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்து நிறுத்தி என்னைத் தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்தனர்.

அன்று நாம் போர்நிறுத்த உடன்படிக்கையை செய்ததன் காரணமாகவே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடிந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • Kusumpan
  Kusumpan

  ………. கட்டிப்பிடித்துக் குத்தியதும் உங்களுக்குப் பழக்கமான ஒன்று என்பதைக் காட்டிவிட்டீரே. இதனால் தானே உம்மை ஜனாதிபதியாகமல் எம்தலைவர் தள்ளிவிழுத்தினார். இன்னும் புரியவில்லையா……..?

  Reply
 • palli
  palli

  குசும்பு ஏன் அவர் மீது கோபம்? அவரும் இருக்கீறார் என உலகம் அறிய வேண்டாமா?? பல்லிக்கு பாழாய் போன சந்தேகம் இவர் மீதும் வருகிறது. இவர் இப்போது அவரது கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? சில வாரத்துக்கு முன்பு இவரை ஓய்வூதியம் கொடுத்து கிராமத்துக்கு அனுப்ப போவதாக செய்திகள் வந்தனவே அது என்னமாதிரி என பல்லி கேக்குது.

  Reply