வாசிப்பை நேசிக்காத ஒரு சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய பத்திரிகைகளே வெளிவந்தவன. அவை கூட சில ஆயிரங்களுக்கு மேல் விற்பனையாகவில்லை. ஆனால் இந்தச் சூழலை உடைத்து லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டியது தினமுரசு பத்திரிகை. அதன் ஆசிரியர்கள் பணியாளர்கள் கொலைப்பட்டியலில் இருந்த போதும் பத்திரிகையின் விற்பனையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பத்திரிகையும் அற்புதனின் மறைவைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட போது அதனைத் தாங்கி நிறுத்தியவர் தோழர் அமீன். அப்பத்திரிகையின் ஆசிரியராக வருவதற்கு முன்னரே ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் காரணங்களினால் அவர் பதவியிறக்கப்பட்டு சாதாரண உத்தியோகத்தர் ஆக்கப்பட்டார்.
தனது அறுபதாவது வயதைக் கடந்த தோழர் அமீன் கடந்த ஒரு மாதகாலமாக ஆசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். அதற்கான செலுவுகளை அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்த செலுத்தியதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக தனியார் மருத்துவ மனைகள் கட்டணம் செலுத்தாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
தோழர் அமீன் பல்லாயிரம் இளைஞர்களைப் போல் தாயக விடுதலைக்காப் போராட இடதுசாரி அமைப்பான ஈபிஆர்எல்எப் இல் இணைந்து பின்நாட்களில் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பில் இணைந்துகொண்டவர். வடமராட்சி பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார். இவர் பின்னாட்களில் பெரும்பாலும் தென்மாராட்சி சாவகச்சேரி பகுதியிலேயே தனது இளம்பிராயத்தைக் கழித்தார். அதன் பின் விடுதலைப் போராட்டம் அதன்பின் தொழில் என்று அவர் தலைநகர் கொழும்பிலேயே வாழ்ந்தார்.
2018இல் எனது தாயாரும் ஆசிறி மருத்துவமனையில் பிரைன் அனுறிசம் என்ன மூளை நரம்பு வெடிப்பு சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரு வாரத்திற்கு 35 லட்சம் ரூபா செலுத்தி உயிரோடு மீண்டார். அதன் பின் ஒரு நாள் நானும் எழுத்தாளர் கருணாகரனும் தேசம் சஞ்சிகையை மீளப் பதிப்பிப்பது தொடர்பாக பேசுவதற்கு தோழர் அமீனை ஓரிரவு சந்தித்தோம். பல மணிநேரம் நீண்ட அந்த உரையாடல் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதைகள் அப்போதைய அரசியல் எனப் பலதையும் தொட்டு வந்தது.
திறமையும் ஆளுமையும் மிக்க தோழர் அமீன் போன்றவர்கள் இச்சமூகத்துக்கு மிகவும் அவசியமானவர்கள். அவருடன் உரையாடிய சில மணி நேரப் பதிவுகளே ஒரு வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியமாக அமைந்தது, அவர்களது தலைமுறையின் மறைவு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியங்களின் மறைவும் கூட.
இச்செய்தி பதிவேறுகின்ற போது அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நிறைவேறியிருக்கும் அவரது பிரிவுத் துயரால் வாடும் அனவரது துயரோடும் எனது துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.