செவ்வாய்கிழமை ஜனவரி 11ம் திகதி நெல்லியடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் நான்கு கயவர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த பணம் நகைகள் என்பனவும் சூறையாடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தவறுதலான தொலைபேசி அழைப்பில் வந்த உறவு மிகக்கொடூரமான நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளியுள்ளது. துணிகரமான அப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்.
தொலைபேசி அழைப்பில் வந்தவருடன் பேசியது காதலாக, தொலைபேசி அழைப்பில் வந்தவன் அப்பெண்ணுக்கு ஆசை வாரத்தைகளைக் காட்டி அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி சம்பவ தினம் செவ்வாய்க் கிழமை காலை வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொண்டுவரச் சொல்லி கேட்டுள்ளான். அந்த இளம் பெண்ணும் தன்னுடைய காதலனை யோக்கியன் என நினைத்து அவன் சொன்னவாறே செய்துள்ளார்.
அவ்விளம்பெண் தன்னுடைய காதலுக்காக தன் பெற்றோரைவிட்டு புதுவாழ்வைத் தேடிச் செல்ல அவனோ அவ்அபலைப் பெண்ணை தனதும் தன்னுடைய நண்பர்களதும் காமமப்பசிக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் அவளின் ஊரடியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்.
அவ்விளம் அபலைப் பெண் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை யாரிடமும் சொல்லமாட்டாள் அதனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற துணிச்சலிலேயே இந்த அக்கிரமத்தை இக்கயவர்கள் செய்துள்ளனர். பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அவர்களே காரணம் என்று காரணம் கற்பிக்கின்ற போக்கை தமிழ் சமூகம் இன்னமும் வைத்துக்கொண்டுள்ளதால் இந்தக் கயவர்களும் அதனை வைத்து தாங்கள் தப்பிக்கலாம் என்று நம்பியுள்ளனர்.
ஆனால் அத்துணிகரமான பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸாரிடம் முறையிட்டு இவ்வாறான கயவர்களுக்கு பாடம் கற்பிக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸில் முறையிட்ட போதும் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நால்வரில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளனர்.
பெண்களைப் பாலியல் பிண்டங்களாக மட்டும் பார்க்கின்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. யாழில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. எண்பதுக்களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணை அவ்வமைப்பில் இருந்து தீப்பொறி என்ற பெயரில் வெளியேறிய சிலர் தங்களை வேவு பார்த்ததற்காக கூட்டுப் பாலியல் வல்லுறவை மேற்கொண்டுவிட்டு அப்பெண்ணை புளொட் முகாம் அருகிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் வந்து வாழ்ந்த போதும் மனநிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது கனடாவில் வாழ்க்கின்றனர்.
மற்றைய சம்பவம் தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களைப் பழிவாங்க அவர்களுடைய பள்ளி செல்லும் மகளை மிகக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவ்விளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் புங்குடு தீவில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற இரு பெண் பிள்ளைகளின் தாயான விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்து இருந்தது தெரிந்ததே.
மேற்குறிப்பிட்ட இரு கூட்டுப் பாலியல் வல்லுறவுகளுமே பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒரு இளம்பெண்ணை நம்ப வைத்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தூரோகச் செயல்.
தமிழ் சமூகம் இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகம், எவ்வித சமூக அக்கறையுமற்ற இதையெல்லாம் மீறிய ரவுடிக் கும்பலாக செயற்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூகத்தின் எந்த விடயம் பற்றியும் உருப்படியான ஆய்வுகள் எதையும் இதுவரை செய்து வெளியிடவில்லை. குறைந்தபட்சம் ஏன் தங்கள் மாணவர்கள் காட்டு மிராண்டிகளாக செயற்படுகின்றனர் என்பதை அறிந்து அதனை மாற்றினாலே சமூகத்திற்கு மிகப்பெரும் உதவியாக அமையும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மேற்குள்ளும் காட்டுமிராண்டித் தனங்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாகரீக சமூகம் அருவருக்கத்தக்க நிலைக்கு சென்றுள்ளது. இதையெல்லாம் இவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டே செய்கின்றனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிரியர்கள் முதற்கொண்டு பரவலான பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற காட்டுமிராண்டிகளை பட்டதாரி ஆக்கியதன் விளைவுகளில் ஒன்று தான் தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலைக்குச் செல்வதன் அடிப்படைக் காரணம்.
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா இந்நிலைமை தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என்ற போதும் அவருடைய நடவடிக்கைகளில் மிகுந்த போதாமை காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை காலத்தில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேயுள்ளது.
யாழ் பல்கலைக்கழகம் எங்கு போகின்றதோ அதனை நோக்கியே தமிழ் சமூகமும் செல்லும். காட்ட வேண்டிய பல்கலைக்கழகமே ரவுடிக்கும்பலாக இருந்தால் ரவுடி வாள் வெட்டுக்குழுவாகவும் கூட்டுப்பாலியல் வன்புனர்ச்சியாளர்களாகவும் தான் ஆவார்கள். யாழ் பல்கலைக்கழகம் எப்போது திருந்தும்? யாழில் சமூக மாற்றம் எப்போது வரும்? யாழ் பல்கலைக்கழகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு துணைவேந்தர் சற்குணராஜாவே வந்துவிட்டாரோ?